இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் போராட்டத்தின் பின்னணியில் இந்தியாவின் அதானி நிறுவனம் இருக்கக்கூடும் என்று ஜே.வி.பியின் பெருந்தோட்ட தொழிற்சங்க அமைப்பான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட குறித்த தொழிற்சங்கத்தின் தலைவர் கிட்டினன் செல்வராஜா கூறியவை வருமாறு,
” இலங்கையால் இந்தியாவுக்கு தாரைவார்க்கப்படவிருந்த கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம், மக்களின் கடும் எதிர்ப்பால் அந்நாட்டுக்கு வழங்கப்படவில்லை. இதனால் கவலையில் இருக்கும் இந்தியா, இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன்ஓர் அங்கமாக தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.
அந்தவகையில் அரச பங்காளிக்கட்சியாக இருக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் முன்னெடுக்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தப்போராட்டம் இந்தியாவுக்கு சார்பானதா என்ற சந்தேகம் எழுகின்றது. ஏனெனில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக பெருந்தோட்டங்களில் பெரும்பாலானவற்றை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு விற்பதற்கான இரகசிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. போராட்டத்தின் நோக்கம் அதுவாகக்கூட இருக்கலாம். ” – என்றார்.