” பிரிவினைவாத போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்ட படையினருக்கு எதிராக வெளிநாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதற்கு எதிர்ப்பை வெளியிடுவோம்.” -என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
அத்துடன், போர்காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கதைத்துக்கொண்டிருக்காமல் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கிவிட்டு முன்நோக்கி பயணிக்க வேண்டும்.
ஜெனிவா கூட்டத்தொடர் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இலங்கையில் பிரிவினைவாத போர் ஏற்பட்டிருந்தது. சுதந்திரமாக செயற்படக்கூடிய சூழ்நிலை இருக்கவில்லை. தெற்கிலும், வடக்கிலும் அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டனர். அப்பாவி மக்கள் இலக்கு வைக்கப்பட்டனர். வடக்கிலிருந்து சிங்கள, முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்த பிரிவினைவாத குழுவை ஒடுக்கவேண்டிய தேவை பாதுகாப்பு படையினருக்கு ஏற்பட்டது. எனவே, தீவிரவாதிகளை ஒழித்ததற்காக எமது நாட்டு படையினருக்கு எதிராக வெளிநாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கோ, தண்டனை வழங்குவதற்கோ நாம் எதிர்ப்பு.
எவராவது தனிப்பட்ட ரீதியில் தவறிழைத்திருந்தால் தராதரம்பாராது, உள்நாட்டு சட்ட கட்டமைப்பின் பிரகாரம் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
அதேவேளை, பிரபாகரனுக்கு பிறகு புலிகள் அமைப்பை பொறுப்பேற்ற தலைவர் சுதந்திரமாக வெளியில் இருக்கின்றார். கிழக்கு மாகாண தளபதியாக செயற்பட்ட கருணாவும் அரசியல் செய்கின்றார். இந்நிலையில் சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட புலி உறுப்பினர்களை தடுத்துவைத்திருப்பது நியாயமா? இது குறித்து கவனம் செலுத்தப்படவேண்டும்.
போர்காலம் பற்றி தற்போது கதைப்பது பயன் இல்லை. எல்லாவற்றையும் மறந்து, அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி முன்னோக்கி பயணிக்கவே முயற்சிக்கவேண்டும்.” – என்றார்.










