ஒற்றையாட்சியை பலவீனப்படுத்தக்கூடிய எந்தவொரு சரத்தும் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்படக்கூடாது என்று அமைச்சர் உதய கம்மன்பில தலைமையிலான பிவிதுரு ஹெல உறுமய யோசனை முன்வைத்துள்ளது.
புதிய அரசியலமைப்பு எவ்வாறு அமையவேண்டும் என குறிப்பிட்டு நிபுணர் குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது தமது கட்சியால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் குறித்து அமைச்சர் உதய கம்மன்பில விளக்கமளித்தார். இதன்போது அவர் கூறியவை வருமாறு,
“ நாட்டின் தற்போதைய பெயர் ‘இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு’ என்றுள்ளது . ஜனநாயகம், சோசலிசம் என்பன சொல்லளவில் அல்லாமல் செயலில் இருக்கவேண்டும். எனவே, நாட்டின் பெயர் ‘இலங்கை குடியரசு’ என இருக்க வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
பூகோல ரீதியில் இலங்கையின் அமைவிடம் முக்கியம். நாட்டை பலவீனப்படுத்துவதற்கான முயற்சிகள் 500 ஆண்டுகளுக்கு மேலாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. எனவே, ஒற்றையாட்சியை பலவீனப்படுத்தும் எந்தவொரு சரத்தும் உள்ளடக்கப்படக்கூடாது.
குறிப்பாக சிங்களத்தில் ஏக்கிய ராஜ்ய என்பது தமிழில் ‘ஒற்றையாட்சி’ எனவும், ஆங்கிலத்தில் ‘யுனிட்டரி’ எனவும் இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் சொல்லை தூக்கிப்பிடித்து சமஷ்டி முறைமையை வலியுறுத்துவதற்கு சிலர் முயற்சிக்ககூடும்.
பௌத்த மதம் இலங்கை அரச மதமாக வேண்டும்.
அதேவேளை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீடிக்கப்படவேண்டும். ஆனால் நாடாளுமன்றத்துக்கு பொறுப்புக்கூறவேண்டியவராக ஜனாதிபதி இருக்கவேண்டும். அரச பாதுகாப்பு தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தைதவிர, ஜனாதிபதியால் எடுக்கப்படும் சர்ச்சைக்குரிய தீர்மானங்களை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும்.
ஜனாதிபதி தேர்தல் அவசியமில்லை. நாடாளுமன்றத் தேர்தலின்போதே கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவேண்டும். வெற்றிபெறும் கட்சியில் இருந்து ஜனாதிபதி பதவி வகிப்பார். அத்துடன், ஜனாதிபதி பதவியை வகிப்பதற்கான காலவரையறை நீக்கப்படவேண்டும்.
6 மாதங்களுக்கு ஒரு தடவை ஜனாதிபதியின் செயற்பாடு தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவேண்டும். அவ்விவாதத்தில் ஜனாதிபதி பதிலளித்து உரையாற்ற வேண்டும். அதேபோல ஜனாதிபதி நடவடிக்கை தொடர்பில் பிரதியமைச்சு பதவியொன்றும் உருவாக்கப்படவேண்டும்.
நாட்டில் நடைமுறையில் உள்ள தனியார் மற்றும் பிரதேச சட்டங்கள் நீக்கப்பட்டு, ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற முறை அமுலுக்கு வரவேண்டும். இரட்டை பிரஜை உரிமை கொண்டுள்ளவர்கள் அரசு மற்றும் அரச நிறுவனங்களில் உயர்பதவிகள் வகிப்பது தடைசெய்யப்படவேண்டும்.” – என்றார்.
