21/4 தாக்குதலின் பின்னணி மற்றும் வெளிநாட்டு தொடர்புகள் உட்பட அனைத்து விடயங்களும் முழுமையாக கண்டறியப்படவேண்டும். இதனைவிடுத்து சஹ்ரானின் மரணத்துடன் விசாரணை அறிக்கையையும் மூடிமறைக்க முற்படக்கூடாது – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“21/4 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆரம்பம் முதல் இறுதிவரை முழுமையாக விசாரிக்கப்படவேண்டும். தாக்குதலை தடுக்க தவறியதை மட்டும் அடிப்படையாகக்கொண்டு முன்னெடுக்கப்படும் நடவடிக்கையை ஏற்கமுடியாது.
இத்தாக்குதலின் பின்னணியில் அரசியல் கரம் இருந்ததா, தாக்குதலுடன் வெளிநாடுகளுக்கு உள்ள தொடர்பு என்ன என்பவையும் விசேட விசாரணை ஊடாக கண்டறியப்படவேண்டும்.
அதேபோல அடிப்படைவாதக் குழுவொன்றின் தலைவன் முதல் தாக்குதலிலேயே உயிரிழந்திருக்கமாட்டார். எனவே, சஹ்ரானின் பின்புலம் பற்றியும் விசாரிக்க வேண்டும். சஹ்ரானின் ‘பொஸ்’ யார், பொஸ்ஸா அல்லது பொஸ்களா என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் இதனை மையப்படுத்தியதாக விசாரணை அமையவில்லை.
வெளிநாட்டு தொடர்பு குறித்து மேலதிக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை முன்வைத்துள்ளது. எனவே, உரிய தரப்புகள் அது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும். ஆனால் விசாரணைகளை மூடிமறைக்கும் நடவடிக்கையே இங்கு நடைபெற்றுவருவதை காணமுடிகின்றது.
அதேவேளை, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை மௌனிக்க வைக்கும் நோக்கில் அவர்மீது விமர்சனங்களைத் தொடுப்பதற்கு ஆரம்பித்துள்ளனர். உள்நாட்டில் உரிய வகையில் நீதி கிடைக்காவிட்டால், சர்வதேசத்தை நாடுவது உறுதி. நாடாளுமன்றத்தில் நடைபெறும் 3 நாட்கள் விவாதத்தின்போது ஏனைய தகவல்களை வெளியிடுவோம்.” – என்றார்.