ஆட்டம் காணுமா அரசின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம்?

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி அரசியிலிருந்து தமது கட்சி வெளியேறவேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர், கட்சி தலைமைப்பீடத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

தேர்தல் காலங்களில் சுதந்திரக்கட்சிக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதையும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உரிய வகையில் நிறைவேற்றவில்லை எனவும், கட்சியை ஒடுக்கும் செயல்கள்கூட தற்போது மறைமுகமாக இடம்பெற்றுவருகின்றன எனவும் சுட்டிக்காட்டியே மேற்படி வேண்டுகோளை முன்வைத்துள்ளனர் எனவும் அறியமுடிகின்றது.

எனினும், சுதந்திரக்கட்சியிலுள்ள மற்றுமொரு தரப்பு, அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு விரும்பவில்லை. அவ்வாறு முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுவருகின்றது.

குறிப்பாக அரசுக்குள் இருந்துக்கொண்டே போராடவேண்டும் எனவும், 21/4 தாக்குதல் அறிக்கையை மையப்படுத்தி வெளியேறுவது தவறான விம்பத்தை உருவாக்கும் எனவும் எனவும் அந்த தரப்பு கருத்து வெளியிட்டுவருகின்றது.

இதனால் ஏற்கனவே உடைந்துள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, எதிர்காலத்தில் மேலும் இரு அணிகளாக பிளவடையக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொள்ளும் பட்சத்தில், மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை அரசாங்கம் இழக்க நேரிடும்.

இவ்வருடத்தில் மாகாணசபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, சுதந்திரக்கட்சி தீர்க்கமானதொரு முடிவை எடுக்கும் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

இதற்கிடையில் விமல்வீரவன்ஸ தலைமையிலான அணியினரும் மொட்டு கட்சிக்காரர்கள்மீது அதிருப்தியிலேயே இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles