பெருந்தோட்ட நிர்வாகிகள் மேற்கொள்ளும் அடாவடித்தனங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடருமேயானால் தோட்ட நிர்வாகிகள் அடிக்கடி ஹட்டன் மல்லிகைப் பூ சந்தியில் தொடர் போராட்டங்களை நடாத்த வேண்டி ஏற்படும். அவர்களினால் இதனை எவ்வகையிலும் தவிர்க்க முடியாதுபோகும் என்று பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் குறிப்பிட்டார்.
மலையக மக்கள் முன்னணியின் பதுளைப் பிராந்திய பணியகத்தில் (இன்று) 08.03.2021 நடைபெற்ற ஒன்று கூடல் நிகழ்வொன்றில், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் கலந்து கொண்டு பேசுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
இவ் ஒன்று கூடல் நிகழ்வில், பதுளை மாவட்ட பெருந்தோட்ட மட்டத்திலான தலைவர்கள், மகளிர் மற்றும் இளைஞர் பிரிவு முக்கியஸ்தர்கள், சமூக நலன் விரும்பிகள் என்ற வகையில் பெருமளவிலானோர், சுகாதார வழிமுறைக்களுக்கமைவாக கலந்து கொண்டிருந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் தொடர்ந்து பேசுகையில்,
‘ஹட்டன் மல்லிகைப் பூ சந்தி’ என்பது தொழிலாளர்களுக்கான வரலாற்றுப்பதிவு பிரதேசமாகும். தொழிலாளர்களுக்கான நியாயப்பூர்வமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு, அத் தொழிலாளர்களினால் போராட்டங்கள் மேற்கொள்ளப்படும் இடமாகும். அத்தகைய இடத்தில் தோட்ட நிருவாகிகள் இணைந்து போராட்டமொன்றை நடாத்தியிருக்கின்றனனர். தொழிலாளர்களுக்கெதிராகவே இப் போராட்டம் அமைந்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களுக்கெதிராக, தோட்ட நிர்வாகங்களினால் கட்டவிழ்த்து விடப்படும் அடாவடித்தனங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து செல்லுமேயானால், அதன் பிரதிபலனை தோட்ட நிருவாகிகள் விரும்பியோ, விரும்பாமலோ எதிர்கொள்ள வேண்டியே ஏற்படும். தோட்ட நிருவாகிகள் தொடர்ந்தும் தம்மை திருத்திக்கொள்ளாவிட்டால்,’சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்பதற்கமைய தொழிலாளர்களின் எதிர்ப்பினை ஏற்றுக்கொண்டேயாக வேண்டியது தவிர்க்க முடியாததாகிவிடும்.
பெருந்தோட்டங்களில் தொழிலாளர்கள், தோட்ட நிருவாகிகள் மத்தியில் பிணக்குகள் ஏற்படுவது சகஜமாகும். இப் பிணக்குகளை தோட்ட மட்டத்தில் நிவர்த்தி செய்ய, தோட்டமட்டத்தலைவர்கள் சுமூக பேச்சுவார்த்தைகள் மூலம் முயற்சிப்பர். அம் முயற்சி பயனளிக்காதபட்சத்தில் தொழிற்சங்கங்களின் தலையீடுகள் இடம்பெறும். இத் தலையீடுகளிலும் பயன் கிடைக்காதுவிட்டால்,உதவித் தொழில் ஆணையாளர் அலுவலகம், தொழில் மன்று ஊடாகவே பிரச்சினைகள், பிணக்குகள் தீர்த்து வைக்கப்படும். இவ்வாறான முறைகளின் அடிப்படையிலேயே முன்னெடுப்புக்கள் இடம்பெறும்.
இப்படி முறைகளை, தோட்ட நிருவாகங்கள் மீறி செயல்படுவதாலேயே, பெருந்தோட்டங்களில் அமைதியின்மைகள் தோற்றுவிக்கப்படுகின்றன. அண்மைக்காலமாக தோட்ட நிருவாகங்கள், தோட்டங்களில் ஏற்படுகின்ற சிற் சில பிரச்சினைகள் மற்றும் சிறு பிணக்குகள் ஆகியவற்றுக்கும், பொலிஸ் நிலையங்களை நாடும் புதிய கலாசாரமொன்றினை மேற்கொண்டு வருகின்றன. இப் பொலிஸ் நிலையங்கள் ஊடாக, தோட்ட நிருவாகங்களே பயனடைகின்றன.
பொலிசாரின் அமோக ஆதரவும், தோட்ட நிருவாகங்களுக்கு கிடைத்து வருவதோடு, தொழிலாளர்களுக்கெதிரான கடும் நடவடிக்கைகளும் பொலிசாரினால் முன்வைக்கப்படுகின்றன. இதனால் அப்பாவித் தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு வகைகளிலும் பெரும் பாதிப்புக்களையும்இ அசௌகரியங்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளனர்.
இது போன்ற இன்னோரன்ன செயல்பாடுகளினால், தோட்டத் தொழிலாளர்கள், தோட்ட நிருவாகங்கள் மீது, கடும் அதிர்ப்தியினையும், எதிர்ப்பினையும் கொண்டுள்ளனர். தோட்ட நிருவாகங்களின் இப்புதிய தொழிற் பிணக்குகளுக்கு காவல் துறையை நாடும் கலாசாரங்களினால் பெருந்தோட்டப் பகுதிகளில் பெரும் அமைதியின்மைகளும், பிரச்சினைகளும் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன.
தற்போதைய நிலையில் பெருந்தோட்டப்பகுதிகளில் அனுபவமுள்ள நிருவாகிகள் இல்லாத நிலை மேலோங்க, அனுபவமற்ற தோட்ட நிருவாகிகளே கடமைகளில் இருந்து வருகின்றனர். இதுவும், பெருந்தோட்டப்பகுதிகளில் நிலவி வரும் அமைதியின்மைக்கும், காரணங்களாக அமைந்துள்ளன. அத்துடன், பெருந்தோட்டப் பகுதிகளில் அனுபவமுள்ள நிருவாகிகளின் வெற்றிடங்கள் பெருமளவில் இருக்கவே செய்கின்றன.
அட்டன் சாமிமலை ஒல்டன் பெருந்தோட்டத்தைச் சேர்ந்த தோட்ட நிருவாகிகள் இருவர் தாக்கப்பட்டதாக கூறப்பட்டு, பத்து தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், அத் தோட்டப்பகுதிகளில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளன. தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி கடந்த பெப்ரவரி மாதம் 5ந் திகதி மேற்கொண்ட பணிப்பகிஸ்கரிப்பின் போது, தோட்ட நிருவாகங்கள் மேற்கொண்ட எதேச்சதிகார செயல்பாடுகளையடுத்தே, பிரச்சினை ஏற்பட வழி கோலியது. தோட்டத் தொழிலாளர்களது நியாயப்பூர்வமான போராட்டத்தை, தோட்ட நிருவாகங்கள் கொச்சைப்படுத்தி, உதாசீனம் செய்தமையே, ஏற்பட்ட பிரச்சினைக்கு காரணமாகும்.
ஹட்டன் – மல்லிகைப் பூ சந்தியென்பது, தோட்டத் தொழிலாளர்களுக்கான வரலாற்றுப் பதிவு பிரதேசமாகும். அம் மல்லிகைப் பூ சந்தியில் தோட்ட நிருவாகிகள் இணைந்து போராடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தோட்ட நிருவாகிகளின் இச் செயல்பாடானது, மேலுமொரு வரலாற்றுப் பதிவாகவே பார்க்க வேண்டியிருக்கின்றது.
தோட்ட நிருவாகிகள் ‘மல்லிகைப் பூ சந்தியில்’ இறங்கி ஆர்ப்பாட்டம் செய்த போதாவது, தோட்ட தொழிலாளர்கள் எந்த அளவிற்கு மன உளைச்சல், விரக்தி, வேதனை, துன்பம் போன்ற அவலங்களுக்கு ஆளாகியிருப்பார்கள் என்பது புரிந்திருக்கும்.
தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மனிதாபமானத்துடன் அணுகப்படல் வேண்டும். அவர்களது தொழில்சார் உரிமைகள் மீறப்படாத வகையில், செயல்பாடுகள் அமைவது முக்கியமானதாகும்.
இவைகள் தோட்ட நிருவாகங்கள் புரிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகும். அதற்கமைவாக தோட்ட நிருவாகங்கள் செயல்படுவார்களேயானால், தோட்டங்களில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புக்களே இல்லை. ‘கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ என்பதற்கமைய தற்போது தோட்ட நிருவாகங்கள் செயல்படுகின்றன.
தோட்ட நிருவாகங்கள் தொடர்ந்தும் அடாவடித்தனங்கள் மற்றும் எதேச்சதிகாரம், அடிப்படை மனித உரிமை மீறல், தொழில்சார் உரிமைகள் மீறப்படல், ஆண்டான் அடிமை செயல்பாடுகள் போன்றவற்றை, தொழிலாளர்கள் மீது மேற்கொள்ளப்படுமேயானால், தொழிலாளர்களின் மௌனம் நீடிக்காது. அதன் பிரதிபலன்களை தோட்ட நிருவாகங்கள் எதிர்கொள்ள வேண்டியே ஏற்படும். அது போன்ற எதிர்விளைவுகளுக்கு தோட்ட நிருவாகங்கள் மல்லிகைப்பூ சந்தியில் தொடர் போராட்டங்களை நடாத்த வேண்டிவரும்.
இப் போராட்டத்தில் கலந்து கொண்ட தோட்ட நிருவாகங்கள் வெட்கப்படப் வேண்டுமேமொழிய எவ்விதத்திலும் பெருமை கொள்ள முடியாது.
ஆகவே, தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆரோக்கியமான முறையில் அணுகி, முறையான படி முறைகளை மேற்கொண்டு, தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு இணக்கப்பாடுகளையும், தோட்ட நிருவாகங்கள் வெளிப்படுத்த வேண்டும்’ என்று கூறினார்.
