‘தோட்டத்தொழிலாளர்களை ஏமாற்றியுள்ளது இந்த அரசு’ – சஜித்

” தற்போதைய அரசினால் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் படுமோசமான முறையில் ஏமாற்றப்பட்டுள்ளனர்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பசறை வாரச்சந்தைத் தொகுதியில்  இன்று 23.07.2020ல் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது சஜித் மேலும் கூறியவை வருமாறு,

” அடுத்த மாதம் 5ஆம் திகதி நடைபெறும் தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தி அமோக வெற்றியடைந்து நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும். அவ் ஆட்சியில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சொன்றை வடிவேல் சுரேசுக்கு வழங்குவேன்.

வடிவேல் சுரேசிடம் உங்களுக்கு எந்த அமைச்சு வேண்டும் என்று நான் கேட்டேன். அதற்கு அவர் பதில் கூறவில்லை. பெருந்தோட்ட மக்களை கௌரவிக்கும் வகையில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சை வழங்கினால் பொறுப்பேற்பீர்களா என்றும் கேட்டேன். அதற்கு அவர் சரியென்று தலையை அசைத்தார்.

அத்துடன் ரவி சமரவீர,  ஹரின் பெர்னான்டோ ஆகியோருக்கும் முக்கிய அமைச்சு பொறுப்புக்களை வழங்குவேன்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெருந்தோட்ட மக்கள் எனக்கு வழங்கிய அமோக ஆதரவிற்கு  பிரதி உபகாரமாகவே  அம்மக்களுக்கு சேவையாற்றக்கூடியதொரு அமைச்சான பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சை அம்மக்களுடன் இரண்டறக் கலந்திருக்கும் வடிவேல் சுரேசிற்கு வழங்குவேன்.

நான் பிரதமராக பதவியேற்று 24 மணித்தியாலயங்களுக்குள் எரிபொருள்களின் விலையைக் குறைப்பேன். சுயதொழில்கள் மற்றும் வாழ்வாதரங்கள் ஆகியவற்றை மேற்கொள்ள நூற்றுக்கு 4 வீத வட்டியையும் பெற்றுக்கொடுக்க ஏற்பாடுகளைச் செய்வேன். வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு மாதம் ஒருமுறை தலா இருபதாயிரம் ரூபா என்றடிப்படையில் வழங்குவேன். மக்களிடம் பணபுழக்கத்தை ஏற்படுத்துவேன். ” – என்றார்.

எம். செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles