பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்துக்கான விருப்பு வாக்கு பட்டியலில் ஜீவன் தொண்டமானே முதலிடம் பிடிப்பார் என மலையக இளைஞர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.
பொதுத்தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுவரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட தலைமை வேட்பாளருமான ஜீவன் தொண்டமானுக்கு எட்டு திக்கில் இருந்தும் பேராதரவு பெருகிவருகின்றது.
மலையகத்தை மையமாகக்கொண்டியங்கும் சிவில் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள், மகளிர் அமைப்புகளும், வர்த்தக சமூகம், புத்திஜீவிகள் ஒன்றியம் மற்றும் கலைஞர்கள் அங்கம் வகிக்கும் அமைப்புகள் ஆகியன ஏற்கனவே ஆதரவு வழங்கியுள்ள நிலையில், காங்கிரஸில் இருந்து வெளியேறிய இ.தொ.கா. ஆதரவாளர்களும் மீண்டும் அந்தக் கட்சியில் இணைந்து, ஜீவனின் கரங்களைப்பலப்படுத்திவருகின்றனர்.
இவை உட்பட மேலும் சில காரணிகளை அடிப்படையாகக்கொண்டே விருப்பு வாக்குப் பட்டியலில் ஜீவன் தொண்டமான் முன்னிலை வகிப்பார் என மலையக இளைஞர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.
அதுமட்டுமல்ல பிரச்சாரக் கூட்டங்களில் விமர்சனங்களை மாத்திரம் முன்வைத்துவரும் வேட்பாளர்களுக்கு மத்தியில், திட்டங்களை முன்வைத்து, அவை தொடர்பில் விளக்கமளிக்கும் விதத்தில் உரையாற்றும் ஜீவனின் அரசியல் ‘ஸ்டைலானது’ மலையக இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்பதுடன், புதியதொரு அரசியல் கலாச்சாரத்துக்கான ஆரம்ப புள்ளியாகவும் பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, தென்னிலங்கையிலும், வடக்கு மற்றும் கிழக்கில் இயங்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், ஜீவனின் அரசியல் அணுகுமுறையை வெகுவாக பாராட்டிவருகின்றனர். சிலர் தொலைபேசி ஊடாகவும், மேலும் சிலர் தமது செயலாளர்கள் ஊடாகவும் இந்த தகவலை ஜீவனுக்கு வழங்கியுள்ளனர்.
எனவே, மலையகத்துக்கு ஏற்றவிதத்திலான தலைமைத்துவமொன்றை உருவாக்குவதற்கு கிடைத்துள்ள வாய்ப்பை ஜீவனின் கரங்களைப் பலப்படுத்தி மக்கள் தக்கவகையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என அரசியல் நிபுணர்கள் கருத்து முன்வைத்துள்ளனர்.