மலையக மக்கள் என்றால் அவர்களுக்கு சம்பள பிரச்சினை மாத்திரம்தான் இருப்பதாக பலரும் பேசுகின்றார்கள்.ஆனால் அதனையும் தான்டிய பல பிரச்சினைகள் எங்களுடைய மக்களுக்கு இருக்கின்றன என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.எனவே எங்களுடைய மக்களின் பிரச்சினைகளை சம்பளத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்திவிடாதீர்கள் என மலையக மக்கள் முன்ன்ணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் முன்னாள் அமைச்சரும் நுவரெலியா மாவட்ட ஜக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
ஜக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா அமைப்பாளர் தினேஸ் கிரிசாந்த ஏற்பாடு செய்த தேர்தல் பிரசார கூட்டம் ஒன்று நுவரெலியா குயின்ஸ்பெரி விருந்தகத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் ஜக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும் பண்டார நுவரெலியா மாவட்ட வேட்பாளர்களான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தினேஸ் கிரிசாந்த அசோக ஹேரத் நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் மகிந்த சில்வா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அங்கு உரையாற்றிய வேலுசாமி இராதாகிருஸ்ணன்,
நுவரெலியா மாவட்டம் என்பது நான்கு தேர்தல் தொகுதியை கொண்ட ஒரு மாவட்டமாகும்.இந்த மாவட்டத்தின் நான்கு தேர்தல் தொகுதியிலும் ஜந்துவிதமான காலநிலை நிலவுகின்றது.இவ்வாறான ஒரு மாவட்டம் இலங்கையில் எங்குமே இல்லை என்றுதான் கூற வேண்டும்.
எனவே இந்த மாவட்டத்தை பொருத்த அளவில் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதில் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை என்றுதான் கூற வேண்டும்.அதற்கு கடந்த காலங்களில் இருந்த சுற்றுலா துறை அமைச்சர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.நாங்கள் பலமுறை இது தொடர்பாக கலந்துரையாடிய பொழுதும் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை.
எனவே அடுத்து வருகின்ற அரசாங்கத்தின் மூலமாக அதனை நிறைவேற்ற வேண்டும்.அதற்கான வேலைத்திட்டம் ஒன்றை மிகவிரைவில் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.அதற்கு இந்த மாவட்டத்தில் இருக்கின்ற உள்ளுராட்சி சபைகள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
மேலும் நுவரெலியா மாவட்டத்தின் பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்பாக அனைவரும் பேசுவது சம்பள பிரச்சினை தொடர்பாக மாத்திரமே.ஆனால் அதனைவிட பல பிரச்சினைகள் எங்களுடைய மக்களுக்கு இருக்கின்றது.
குறிப்பாக கல்வி சுகாதாரம் அடிப்படை வசதிகள் என பல பிரச்சினைகள் இருக்கின்றது.இது தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும்.நான் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த பொழுது கல்வி தொடர்பான பல பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுத்தேன்.எனவே ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.