சமல் – பொன்சேகா சபையில் மோதல் – நடந்தது என்ன?

இறுதிப்போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும், அமைச்சர் சமல் ராஜபக்சவுக்குமிடையில் சபையில் கடும் சொற்போர் மூண்டது. இருவரும் சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்துக்கொண்டனர். இடையிடையே சபை நாகரீகமற்ற வார்த்தைப் பிரயோகங்களும் இடம்பெற்றன.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மகிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

சபாநாயகர் அறிவிப்பு வேளையின்போது, ரஞ்சன் ராமநாயக்க விவகாரம் தொடர்பில் சபாநாயகர் விளக்கமளித்தார். ஏன் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டது என்பதற்கான காரணங்களையும் விவரித்தார். அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நேற்று முன்தினம் சபையில் நடத்துக்கொண்ட விதம் குறித்தும் கவலை வெளியிட்டார்.

சபாநாயகரின் அறிவிப்பின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கருத்து வெளியிட்டார்.

” மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவதற்கான உரிமை ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இருக்கின்றது. நிலைமை அப்படி இருக்கையில் ஏன் அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமையை நீக்குவதற்கு அவசரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பட்டது. ரஞ்சன் ராமநாயக்க விவகாரத்தில் சபாநாயகர் கையாண்ட அணுகுமுறை தவறானதாகும். ரஞ்சனுக்கான உரிமைகள் மறுக்கப்படக்கூடாது. உயர்நீதிமன்றத்தை நாடுவதற்கான உரிமை அவருக்கு இருக்கின்றது.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியதுடன், சபாநாயகரின் செயலுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.

அதன்பின்னர் தமது தரப்பு நியாயத்தை சபாநாயகர் முன்வைத்தார். அரசமைப்பின் பிரகாரமே தான் செயற்பட்டதாக குறிப்பிட்டதுடன், தேர்தல் ஆணைக்குழுவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடமுடியும் எனக் குறிப்பிட்டார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா,

” இராணுவத்திலுள்ள காட்டு நீதிமன்றமொன்றால் எனக்கு தண்டனை வழங்கப்பட்டது. சிறை வைக்கப்பட்டேன். குறித்த தீர்ப்புக்கு எதிராக 3 நீதிமன்றங்களில் மேன்முறையீடு செய்திருந்தேன். இவ்வாறு மேன்முறையீடு செய்திருந்தும் எனக்கு நாடாளுமன்றம் வருவதற்கான வாய்ப்பை அப்போதைய சபாநாயகர் (சமல் ராஜபக்ச) வழங்கவில்லை.” – என்றார்.

இதன்போது எழுந்த அமைச்சர் சமல் ராஜபக்ச, ” நாடாளுமன்றம் வருவதற்கு அனுமதி வழங்கினேன்.” – என்றார்.

பதிலுக்கு ” நான் என்ன சொன்னேன் என்று விளங்கியதா” என பொன்சேகா கேட்டார்.

” என்ன என்று கேட்கிறாயா, நான் உமக்கு அனுமதி வழங்கவில்லையா” என சமல் பதிலளித்தார்.

” நான் சொல்வதை கேளும்” – என்றான் பொன்சேகா.

” என்ன ஐசே கேட்பது, உன்னுடைய பலத்தை காட்ட முற்படுகின்றாயா, நீதான் மடயன். வெளியில் வா காட்டுகின்றேன்.” – என்றார் சமல் ராஜபக்ச.

இவ்வாறு இருவருக்குமிடையில் சொற்போர் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் ஆளும் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.

சமல் ராஜபக்சவை சூழ்ந்துக்கொண்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பொன்சேகாவை நோக்கி விமர்சனக் கணைகளைத் தொடுத்தனர். சபைக்கு நடுவில் வந்தும் கூச்சலிட்டனர். பதிலுக்கு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் கருத்து கணைகளைத் தொடுத்தனர். இதனால் சபையில் கடும் அமளி துமளி ஏற்பட்டது. இதனால் சபை நடவடிக்கைகளை ஐந்து நிமிடங்களுக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார்.

சுமார் 20 நிமிடங்களுக்கு பின்னர் சபை கூடியது. இதன்போது ” எவ்வளவு செய்தாலும் நன்றி இல்லை. எனது கருத்து எவரின் மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருந்துகின்றேன்.” – என குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles