கொரோனா வைரஸின் தோற்றம் தொடர்பில் ஆராய்ந்து – கண்டறிந்து அது தொடர்பில் விரிவானதொரு அறிக்கையை முன்வைக்குமாறு புலனாய்வு அமைப்புகளுக்கு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
புலனாய்வு அமைப்புகள், தங்களின் முயற்சிகளை இரட்டிப்பாக்கி, 90 நாட்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் பணித்துள்ளார்.
சீனாவின் வுஹான் நகரில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. சர்வதேச ரீதியில், இதுவரையில் 168 மில்லியனுக்கும் அதினமானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 3.5 மில்லியன் பேர் மரணித்தனர்.
சீனாவின் வுஹான் நகரில் உள்ள கடலுணவு சந்தையிலிருந்து கொரோனா வைரஸ் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.அத்துடன், முதலில் விலங்குகளிலிருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவியதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.எனினும், அமெரிக்க ஊடக தகவல்களின்படி, சீனாவின் ஆய்வகம் ஒன்றிலிருந்து கொரோனா வைரஸ் வெளிவந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே அமெரிக்க ஜனாதிபதி இவ்வாறானதொரு கட்டளையை பிறப்பித்துள்ளார்.