நுவரெலியா மாவட்டத்திலிருந்து தேர்தல் கடமைகளுக்காக பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டிருந்த ஒரு சில அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடைபெற்று வருவதாக நுவரெலியா மாவட்ட செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான எம்.பீ.ஆர்.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் கடமைகளுக்காக நுவரெலியா மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு சில அதிபர்களும் ஆசிரியர்களும் கட்சிக் கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளமை புகைப்படங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு எதிராக ஸ்தாபன கோவை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென தெரியவருகின்றது.அதே நேரம் இவர்கள் இந்த தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் இவர்கள் தேர்தல் கடமையில் இருந்து இடைநிறுத்தப்படலாம் எனவும் தெரியவருகின்றது.
ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் கட்சி கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டதுடன் அவர்களுக்கு விருந்துபசாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை தேர்தல் திணைக்களம் எடுத்து வருவதாகவும் தெரியவருகின்றது.
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு
