” தமிழ் முற்போக்கு கூட்டணி உடையாது. தேர்தலின் பின்னரும் இணைந்தே பயணிப்போம். எனவே, எம்மீது நம்பிக்கை வைத்து கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற வையுங்கள்.” – என்று முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
ஹட்டனில் டி.கே.டபிள்யூ கலாச்சார மண்டபத்தில்இன்று (29) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
திகாம்பரம் மேலும் கூறியதாவது,
நுவரெலியா மாவட்டத்தில் நான்கு தேசிய பாடசாலைகளை அமைப்பதற்கு 2014 இல் அனுமதி கிடைத்தது. ஆனால் அப்போது இங்கிருந்த அமைச்சரும், ஒரு சில அதிபர்களும் இணைந்து அதனை தடுத்துவிட்டனர். இவ்வாறுதான் எமது மக்களுக்கான திட்டங்களை தடுத்துநிறுத்தினர்.
கடந்த நான்கரை வருடங்களில் நாம் அபிவிருத்தி மற்றும் உரிமைசார் விடயங்களை செய்துள்ளோம். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை என சிலர் விமர்சிக்கின்றனர். எமது வேலைத்திட்டங்கள் எவை என்பது தொடர்பில் பத்திரிகை அடித்து ஆதாரம் வெளியிட்டுள்ளோம்.
சேவைகளை முன்வைத்து நாம் வாக்கு கேட்கின்றோம், திகாம்பரம் ஒன்றுமே செய்யவில்லை என குறைகூறி அவர்கள் வாக்கு கேட்கின்றனர். எனவே, சேவை செய்தவர்களுக்கே மக்கள் வாக்களிக்கவேண்டும்.
தமிழ் முற்போக்கு கூட்டணியிலுள்ள தலைவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள். பேரம் பேசக்கூடிய ஆற்றல் இருக்கின்றது. இது இனவாத அரசாங்கம், அந்த அரசாங்கத்தின் ஆட்சி தொடர்ந்தால் பாரிய நெருக்கடிகள் ஏற்படும். தமிழர்களின் வாக்குகள் தேவையில்லை என விமர்வீரவன்ஸ கூறுகின்றார். அப்படியானால் எதற்கு நாம் அவர்களுக்கு வாக்களிக்கவேண்டும்?.
மலையகத்தில் இதற்கு முன்னரும் கூட்டணிகள் உதயமாகியுள்ளன. ஆனால், தேர்தல் காலத்தில் அவை காணாமல்போய்விடும். நாம் ஐந்து ஆண்டுகளாக இணைந்து பயணிக்கின்றோம். இனியும் பயணிப்போம். ” – என்றார்.
பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்