ரணிலுடன் அரசாங்கத்துக்கு ‘டீலா’? – நாமல் வழங்கிய பதில்!

” ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில்  உட்பட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் அரசுக்கு எவ்வித கொடுக்கல் வாங்கல்களும் கிடையாது.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும், அமைச்சருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

கம்பஹாவில்  நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை, எரிபொருள் விலை உட்பட சமகால விவகாரங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இவை குறித்து அவர் மேலும் கூறியவை வருமாறு,

” எரிபொருட்களின் விலையை அதிகரிப்பது தொடர்பில் வாழ்க்கைச்செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு முடிவெடுத்தது. அது தொடர்பில் ஜனாதிபதி அறிக்கையொன்றை விடுத்திருந்தார். எதிர்காலத்தில் விலை உயர்வில் மாற்றங்கள் ஏற்படுமாயின் அது தொடர்பில் கலந்துரையாடி முடிவெடுக்கப்பட்டு உரியவகையில் தீர்மானம் அறிவிக்கப்படும்.

அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு முன்னர் தமது தலைவர் ரணிலா, சஜித்தா என்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி முடிவுக்கு வரவேண்டும். தமது பிரச்சினையை தீர்த்துக்கொண்டே பிறர்மீது கவனம் செலுத்த வேண்டும்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜே.வி.பியின் தலைவர் அநுரகமார திஸாநாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் எமக்கு எவ்வித கொடுக்கல், வாங்கல்களும் கிடையாது.”- என்றார்.

Related Articles

Latest Articles