பசறை சுகாதார பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் 30 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன், பெருந்தோட்டமொன்றின் இரு வரிசை லயன் குடியிறுப்புத் தொகுதிகளை முடக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும், பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் எஸ். ஜெயகுமார் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கை இன்று (08) காலை வெளியான போதே, மேற்படி கோவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் 08-07-2021ல் பிந்துனுவெல கோவிட் 19 சிகிச்சை நிலையத்திற்கு அம்புலன்ஸ் வாகன மூலம் அனுப்பப்பட்டுள்ளனர்.
அடையாளம் காணப்பட்ட மேற்படி 30 பேரில், 11 பேர் பசறைப் பகுதியின் பிலானிவத்தை பெருந்தோட்டப் பிரிவைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் வசித்து வந்த மேற்படி தோட்டப் பிரிவின் இரு லயக் குடியிறுப்புக்களில் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணிய 60 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வகையில், அவ்விரு லயக் குடியிறுப்புக்களும் முடக்கப்பட்டுள்ளன.
சுய தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் 60 பேருக்கும், விரைவில் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக, பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்தார்.
நமது நிருபர்கள் – எம். செல்வராஜா, ராமு தனராஜ்










