பொதுத்தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் யாவும் நாளை (02) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் கடைசி கூட்டங்கள் தொடர்பான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் இறுதிப்பிரச்சாரக் கூட்டம் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் தங்காலையில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.
அத்துடன், சஜித் பிரேமதான தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் இறுதி பரப்புரைக்கூட்டம் நாளை இரவு மத்திய கொழும்பில் நடைபெறவுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் பிரச்சாரக்கூட்டம் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை இரவு மருதானையில் நடைபெறவுள்ளது.
அதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் இறுதி பிரசாரக் கூட்டம் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையில், புதுக்கடை ஜும்மா மஸ்ஜித் வீதிப் பகுதியில் இடம்பெறவுள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றின் இறுதிப்பிரச்சாரக்கூட்டம் நுவரெலியா மாவட்டத்தை மையைப்படுத்தி இடம்பெறவுள்ளது.
அரசியல் கட்சிகளின் இறுதிப்பிரச்சாரக் கூட்டங்களில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் பங்கேற்று உரையாற்றவுள்ளனர்.