21 ஆம் திகதி கறுப்புகொடி ஏற்றுமாறு பேராயர் அழைப்பு விடுப்பு

21/4 தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் நடைபெறும் விசாரணைகளில் திருப்தி இல்லை. உண்மை கண்டறியப்பட வேண்டும். இதனை வலியுறுத்தும், அரசு தமது பயணத்தை மாற்ற வேண்டும் என அழுத்தம் கொடுக்கும் வகையிலும் எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை வீடுகளுக்கு முன்னால் கறுப்பு கொடி ஏற்றுமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் – என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் அவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ 21/4 தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டது. அந்த ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டது. இக்குழு நியமிக்கப்பட்டமை சர்ச்சைக்குரிய காரணியாகும். தனிக்கட்சியொன்றின் உறுப்பினர்களே உப குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.அவர்கள் அரசியல் பின்னணி கொண்டவர்கள். எனவே, ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு மேலாக இக்குழு நியமிக்கப்பட்டதை அனுமதிக்க முடியாது.

அதேபோல ஜனாதிபதிக்கு நாம் அறிக்கையொன்றை அனுப்பியிருந்தோம். அதற்கு வழங்கப்பட்ட பதிலும் திருப்திகரமாக இல்லை. அதனை நிராகரிக்கின்றோம். தற்போது முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் பிரகாரம் நீதி கிடைக்குமா என்ற சந்தேகமும் மேலோங்கியுள்ளது.

அதேவேளை, இராணுவப் புலனாய்வுப்பிரிவுக்கும், சஹ்ரான் குழுவினருக்கும் இடையில் அன்று சிற்சில கொடுக்கல் – வாங்கல்கள் இடம்பெற்றுள்ளன. இவை என்ன என்ற வினா எழுகின்றது. ஆமி மொய்தீன் ஊடாக இடம்பெற்ற அந்த கொடுக்கல் – வாங்கல்கள் என்ன? இது தொடர்பில் விசாரணை இடம்பெற்றதா?

வவுனதீவில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டனர். இதன் பின்னணி குறித்து சரிவர விசாரணை நடத்தப்பட்டதா?

அத்துடன் ‘சொனிக்’ என்ற அரச புலனாய்வுப் பிரிவு அதிகாரி மாத்தளை சஹ்ரான் என்பவரைப் பயன்படுத்தி, இந்தோனேசியாவுக்கு அழைப்பை ஏற்படுத்தி தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்குமாறு ஐ.எஸ். அமைப்பிடம் கோரியது ஏன்? தாக்குதலின் பின்னணியில் செயற்பட்ட உண்மையான நபர்களை பாதுகாப்பதற்காகவா இவ்வாறு ஐ.எஸ். அமைப்பினரை தொடர்பு கொண்டனர்?

தாஜ் சமுத்திரா ஹோட்டலுக்கு தாக்குதல் நடத்தச்சென்ற தற்கொலை குண்டுதாரியுடன் தொடர்பைபேணிய இராணுவ புலனாய்வுப்பிரிவு அதிகாரி யார்? இவை தொடர்பில் ஆராயப்பட்டாத?

இவ்வாறு அடி முதல் முடிவரை எல்லாம் ஆராயப்பட்டு அனைவரும் கண்டுபிடிக்கப்பட வேண்டும். நெத்திலிமீன்களை பிடித்துவிட்டு சூறாக்களை தப்பிக்க இடமளிக்கமுடியாது. அவ்வாறானதொரு முயற்சியா இடம்பெறுகின்றது என்ற சந்தேகம் எழுகின்றது. எது எப்படி இருந்தாலும் நீதி கிடைக்கும்வரை நாம் ஓயமாட்டோம்.

21/4 தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மூடிமறைக்கப்படக்கூடாது, உண்மை கண்டறியப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்கும், மக்களின் மனநிலையை புரிந்துகொண்டு அரசு நேர்வழியில் பயணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் முகமாகவும், மக்களுக்கான ஆட்சியை நடத்துமாறு அழுத்தம் கொடுத்தும் எதிர்வரும் 21 ஆம் திகதி வீடுகள், வியாபார நிலையங்கள், அலுவலகங்கள் மற்றும் ஆன்மீக நிலையங்களில் கறுப்புக்கொடி ஏற்றுவோம்.

அதேவேளை, 21/4 தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதி கிடைக்காவிட்டால் சர்வதேசத்தை நாடுவது உறுதி. பாப்பரசருக்கு இது தொடர்பில் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.” – என்றார்.

Related Articles

Latest Articles