தலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்கும் திட்டமில்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியது, ஆப்கான் மக்களை மட்டுமல்லாமல் உலக நாடுகளையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பல்வேறு நாடுகளில் தலிபான்கள், பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால் தலிபான்கள் அமைக்கவிருக்கும் அரசை ஏற்றுக்கொள்வதில் சிக்கல்கள் நீடிக்கின்றன.
இதற்கிடையில், ‘நாங்கள் எந்தவித எதிரிகளையும் சம்பாதிக்க விரும்பவில்லை. சர்வதேச சமூகம் எங்களை அங்கீகரிக்க வேண்டும்’ என தலிபான்கள் உலக நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர்களை சந்திக்கையில், அவரிடம் ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜஸ்டின் ட்ரூடோ, ‘தலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்கும் திட்டம் கனடாவுக்கு இல்லை.
அவர்கள் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பலவந்தமாக தூக்கியெறிந்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருக்கிறார்கள்’ என்றார். மேலும், கனடா நாட்டின் சட்டத்தின்படி, தலிபான்கள் பயங்கரவாத அமைப்பாகவே அங்கீகரிக்கப்படுவார்கள் என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
தலிபான்களிடமிருந்து பாதுகாக்கும் நோக்கில் சுமார் 20,000 ஆப்கானியர்களை கனடாவில் குடியமர்த்த திட்டமிட்டுள்ளதாக கனடா ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசை பாகிஸ்தான் அங்கீகரித்துள்ளது. தலிபான் அரசுடன் நட்பு ரீதியிலான உறவை மேம்படுத்த தயார் என சீனா அறிவித்துள்ளது. தலிபான் செயல்பாட்டை பொறுத்து முடிவு எடுக்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.