இலங்கையின் தலைவிதியை தீர்மானிக்கப்போகின்ற நாளாக ஆகஸ்ட் 5 ஆம் திகதி மாறியுள்ளது. அன்றைய தினம் வாக்களிப்பு முடிவடைந்ததும் மறுநாள் காலை 8 மணி முதலே வாக்கெண்ணும் பணி ஆரம்பமாகும். இதன்படி,மொட்டு மலருமா அல்லது தொலைபேசி ஓங்கி ஒலிக்குமா என்ற வினாவுக்கான விடையை 6 ஆம் திகதி நள்ளிரவுக்குள் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.
கொரோனா வைரஸ் காரணமாக இரண்டு தடவைகள் பொதுத்தேர்தல் பிற்போடப்பட்டது. இலங்கை அரசியல் வரலாற்றில் இவ்வாறு பொதுத்தேர்தல் இரு தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட முதல் சந்தரப்பம் இதுவாகும்.
இலங்கையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தாலும் இரண்டாவது அலை ஏற்படக்கூடும் என்ற அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே பிரச்சாரப்போரும் முன்னெடுக்கப்பட்டது. இன்று நள்ளிரவுடன் (02) பிரச்சாரங்கள் யாவும் நிறைவுக்கு வருவதால் கடந்தவாரம் அரசியல் களம் பெரும் பரபரப்பாகவே காணப்பட்டது. அதன் தாக்கம் இன்னும் தணியவில்லை.
சுகாதார வழிகாட்டலுக்கமைய பிரச்சாரங்களை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தபோதிலும் அவை உரிய வகையில் பின்பற்றப்படவில்லை. எனவே, வாக்களிப்பு தினத்தன்றாவது சுகாதார நடைமுறைகளை உரியவகையில் பின்பற்றுமாறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
வேட்பாளர்களும் – வாக்காளர்களும்
இலங்கையில் 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்தும் வாக்களிப்புமூலம் 196 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள். 29 தேசியப்பட்டியல் ஆசனங்கள், கட்சிகள்பெறும் செல்லுபடியான வாக்குகளுக்கேற்ப பகிரப்படும்.
196 ஆசனங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்து 3 ஆயிரத்து 682 பேரும், சுயேட்சைக்குழுக்களின் சார்பில் 3 ஆயிரத்து 800 பேருமாக மொத்தம் 7 ஆயிரத்து 452 பேர் போட்டியிடுகின்றனர்.
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 19 ஆசனங்களுக்காக 924 பேர் களமிறங்கியுள்ளனர். அதிகளவான வேட்பாளர்கள் தேர்தலில் குதித்துள்ள மாவட்டமாக இது திகழ்கின்றது. பொலன்னறுவை மாவட்டத்திலேயே குறைந்தளவான வேட்பாளர்கள் (152) களம்கண்டுள்ளனர்.
இம்முறை தேர்தலில் ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 874 பேர் வாக்களிப்பதற்கு தகுதிப்பெற்றுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 17 லட்சத்து 9 ஆயிரத்து 209 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 17 லட்சத்து 85 ஆயிரத்து 964 பேரும், வன்னியில் 2 லட்சத்து 87 ஆயிரத்து 24 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 5 லட்சத்து 71 ஆயிரத்து 848 பேரும் வாக்காளர்களாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 லட்சத்து 9 ஆயிரத்து 808 பேரும், திகாமடுல்ல மாவட்டத்தில் 5 லட்சத்து 13 ஆயிரத்து 979 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 2 லட்சத்து 88 ஆயிரத்து 868 பேரும் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளனர்.
இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகளில் 20 – 25 சதவீதமானோர் வாக்குரிமையைப்பயன்படுத்துவதில்லை. எனவே, இம்முறையாவது அனைவரும் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
‘சிஸ்டத்தில்’ மாற்றம்
வழமையாக பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான கையோடு தேர்தல் களமும் சூடுபிடித்து அனல்கக்க ஆரம்பிக்கும். ஆனால், கொரோனா வைரஸ் தாண்டவத்தால் இம்முறை எதிர்ப்பார்த்தளவு தேர்தல் திருவிழா களைகட்டவில்லை. பிரமாண்ட கூட்டங்களை நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.
அதேபோல் வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களில் சுகாதார பரிசோதகர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தேர்தலொன்றில் சுகாதார பரிசோதகர்கள் நேரடியாக தொடர்புபடும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
வழமையாக வாக்களிப்பு முடியும் தினத்தன்றே வாக்கெண்ணும் பணியும் ஆரம்பமாகும். ஆனால், இம்முறை மறுநாளே அப்பணி இடம்பெறவுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இலக்கும், நகர்வும்
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்த நிலையில், பொதுத்தேர்தலிலும் பெருவெற்றியை எதிர்ப்பார்க்கின்றது.அதாவது 150 ஆசனங்களைக் கைப்பற்றி மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் அரியணையேறுவதே அதன் பேராசையாக இருக்கின்றது.
அதற்கேற்றவகையிலேயே பிரச்சார வியூகங்கள் வகுக்கப்பட்டு,திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஒரு புறத்தில் இனவாதம் கக்கப்பட்டதுடன் மறுபுறத்தில் தேசிய உணர்வும் தூண்டப்பட்டது. போர் முடிவடைந்த பின்னர் – 2010 இல் – நடைபெற்ற பொதுத்தேர்தலில்கூட மஹிந்த தரப்பால் மூன்றிலிரண்டு பலத்தை மக்கள் வாக்குமூலம் பெறமுயாமல்போனதால்,இம்முறையும் அது சாத்தியப்படாது என்றே அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம், இராணுவ மயமாக்கலை நோக்கி பயணிப்பதாகவும், ஏதேச்சாதிகாரமாக செயற்படுவதாகவும் விமர்சனங்கள் குவிந்துள்ள நிலையில், அத்தரப்புக்கு மூன்றிலிரண்டு பலத்தை வழங்குவது ஜனநாயகத்தை படுகொலை செய்வதற்கு சமமான செயலாகும் எனவும், பலமான எதிர்க்கட்சி இருக்கும் பட்சத்திலேயே அரச இயந்திரம் முறையாக சுழலும் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ச குருணாகலை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். மொட்டு அணியின் பங்காளக்கட்சி தலைவர்களான விமல்வீரவன்ஸ, தினேஸ்குணவர்தன, உதயகம்மன்பில ஆகியோர் கொழும்பு மாவட்டத்திலும், வாசுதேவ நாணயக்கார இரத்தினபுரி, மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை மாவட்டத்திலும் போட்டியிடுகின்றனர்.
தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லா,ஈ.பி.டிபியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இம்முறை தனித்து களமிறங்கியுள்ளனர்.
தேர்தல்களில் வாக்கு வேட்டை நடத்துவதற்காக வழமையாக புலிப்புராணம்பாடும் ராஜபக்ச தரப்பு, இம்முறையும் அந்தப்புராணத்தை கைவிடவில்லை. மறுபுறத்தில் ஈஸ்டர் குண்டுதாக்குதல், சர்வதேச அழுத்தங்கள் ஆகியவற்றையும் முன்னிலைப்படுத்தி சிங்கள, பௌத்த வாக்குகளை மட்டுமல்ல கத்தோலிக்க வாக்குகளையும் பெறுவதற்கு கங்கணம்கட்டி செயற்பட்டது.
இதன்ஓர் அங்கமாகவே பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் ஹரின்பெர்ணான்டோ வெளியிட்ட அறிவிப்பையும் ராஜபக்சக்களின் சகாக்கள் ஊதிப்பெருப்பித்தனர்.
கொழும்பு மாவட்டத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ஒரு சிறுபான்மையின வேட்பாளர்கூட களமிறக்கப்படவில்லை. நுவரெலியா மாவட்டத்தில் மூன்று சிங்களவர்களும், 8 தமிழர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். சுதந்திரக்கட்சியும் அந்த மாவட்டத்தில் தனித்து போட்டியிடுகின்றது. இவ்வாறு தமிழ் வாக்குகளை சிறதடிப்பதற்காக மொட்டு அணி மறைமுகமாக சதித்திட்டங்களையும் தீட்டியுள்ளது என்ற குற்றச்சாட்டும் இருக்கின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின்
தேர்தல் ஆட்டம்
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியானது பல சவால்களுக்கு மத்தியிலேயே பிரச்சாரங்களை முன்னெடுத்தது. ஐக்கிய தேசியக்கட்சி வழங்கிய நெருக்கடிகள், வேட்பாளர்கள், ஆதரவாளர்களின் வெளியேற்றம் என அந்தப்பட்டியலை நீட்டிக்கொண்டே செல்லலாம்.
; “ஆட்சியைப்பிடிப்போம்”என சஜித் அணியினர் சூளுரைத்து வந்திருந்தாலும் அதற்கான சாத்தியம் குறைவு என்றே அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஏனெனில்,ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் தரப்பே பொதுத்தேர்தலிலும் வெற்றிநடைபோடுவது இலங்கையில் வழமையாகவுள்ளது.
கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தி எவ்வாறு முன்நோக்கி பயணிப்பது என்பதை அடிப்படையாகக்கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்துள்ளது.
சஜித் அணியினருக்கு சவால் விடுக்கும்வகையில் ஐக்கிய தேசியக்கட்சியும் சில வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. ரணில் அணியில் பல தமிழ் வேட்பாளர்கள் இருப்பதால் கொழும்பு, கண்டி ஆகிய மாவட்டங்களில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ளமுடியுமா என்ற சந்தேகம் எழுகின்றது. ஒரு தொகை வாக்குகள் சிதறும்பட்சத்தில்கூட,பிரதிநிதித்துவம் இல்லாமல்போகும் அபாயம் இருக்கின்றது.
அத்துடன், ஐக்கிய தேசியக்கட்சி ஓரணியாக களமிறங்கியிருந்தால் இம்முறை கம்பஹா, இரத்தினபுரி மாவட்டங்களிலும் தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இலகுவில் பெற்றிருக்கலாம். இரு அணிகளாக பிளவுபட்டுள்ளதாலும் – இரு தரப்புகளுமே தமிழ் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாலும் – வெற்றியை போராடிபெறவேண்டிய சூழ்நிலையே ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.பங்காளிக்கட்சி தலைவர்களான மனோ கணேசன், சம்பிக்க ரணவக்க ஆகியோரும் கொழும்பு மாவட்டத்திலேயே களமிறங்கியுள்ளனர். ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணிலும் கொழும்பிலேயே களம்கண்டுள்ளார். முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதால் விருப்புவாக்கு சமர் உச்சம் தொடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எம்.சி.சி. உடன்படிக்கை, கருணா அம்மானின் அறிவிப்பு குருணாகலை தொல்லியல் சம்பவம் ஆகியவற்றை பயன்படுத்தி ராஜபக்ச தரப்புக்கு சஜித் அணி நெருக்கடியை கொடுத்தது. .அத்துடன், ஆளுந்தரப்பின் பலவீனங்களை மக்கள் மத்தியில் பட்டியலிட்டுக்காட்டும் வகையிலும், தாம் ஆட்சிக்கு வந்தால் என்னசெய்வோம் என்பதை மையப்படுத்தியுமே ஐக்கிய மக்கள் சக்தியின் பிரச்சாரப்போர் அமைந்திருந்தது.
அதேவேளை, அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் பாரிய கூட்டணி அமைத்து பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுத்துள்ளது. ஏற்கனவே ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களைக்கொண்டிருந்த ஜே.வி.பி. இம்முறை அவ்வெண்ணிக்கையை அதிகரித்தும்கொள்ளும் நோக்கில் பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்தாலும் அது கைகூடாது என கூறப்படுகின்றது.
லடக்கு, கிழக்கில் பலமுனைப்போட்டி
ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் ‘ஒற்றுமை’ என்பதே தமிழர்களிடம் எஞ்சியிருந்த ஆயுதமாகும். தற்போது அந்த ஆயுதமும் சிதைக்கப்பட்டுள்ளது. பல அணிகளாக பிரிந்தே தமிழ்க்கட்சிள் தேர்தலில் குதித்துள்ளன. இதனால் தமிழ்ப் பிரதிநிதித்துவம் குறைவடைந்து பேரம் பேசும் சக்தி இல்லாமல் போகலாம் என்ற அபாயம் இருக்கின்றது.
தேர்தலில் போட்டியிடும் தமிழ்க்கட்சிகள் அரசியல் நிகழ்ச்சி நிரலைக்கைவிடுத்து தமிழ் மக்களுக்காக ஒன்றிணைந்து செயற்படுமென்றால் பரவாயில்லை. ஆனால் இக்கட்சிகளிடையே முரண்பாடுகளே அதிகம் நிலவுகின்றன. சங்கமம் என்பது சாத்தியப்படாததொன்றாகவே விளங்கும். எனவே,பிரதான கட்சியொன்றில் இருந்து கூடுதல் உறுப்பினர்களை சபைக்கு அனுப்புவதே சிறந்ததாக அமையும். தமிழ் மக்களுக்கென அவர்களின் அமோக ஆணையைப்பெற்ற கட்சியொன்று தற்போதைய சூழ்நிலையில் கட்டாயம் இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அது தமிழர்களின் அரசியல் இருப்பைக் கேள்விக்குறியாக்கிவிடும்.
இணைந்த வடக்கு – கிழக்கில் சுயாட்சி, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கான தீர்வு, சர்வதேச போர்க்குற்ற விசாரணை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை ஆகியவற்றை மையப்படுத்தியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரம் அமைந்திருந்தது. மறுபுறத்தில்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கடுமையாக விமர்சித்து மாற்று தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலேயே ஏனையக்கட்சிகளின் பிரச்சாரப்போர் அமைந்தது.
அதேபோல்,அரச அணுசரணையில் பல சுயேட்சைக்குழு உறுப்பினர்களும், வெற்றிபெறமுடியாது என தெரிந்தும் சிலர் தோல்வியடையவேண்டும் என்பதற்காக மேலும் சிலரும் தேர்தலில் குதித்துள்ளமை தமிழர்களுக்கான சாபக்கேடாகும்.
எனவே, வாக்குரிமை என்ற ஜனநாயக ஆயுதத்தை தமிழ் மக்கள் மதிநுட்பத்துடன் பயன்படுத்தவேண்டும் என்பது தமிழ் புத்திஜீவிகளின் கோரிக்கையாக இருக்கின்றது.
அதேவேளை, கடந்தகாலங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை பெரிதாக வன்முறைச்சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. தேர்தல் சட்டத்திட்டங்களைமீறும் வகையில் சில சம்பவங்கள் பதிவாகியிருந்தன. உள்நாட்டு கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தாலும் கொவிட் – 19 பிரச்சினையால் இம்முறை சர்வதேச கண்காணிப்பு இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மிகமுக்கியமாக வாக்கு என்பது மக்களின் பிறப்புரிமையாகும். மிகமுக்கிய ஜனநாயக கடமைகளுள் ஒன்றாகும். எனவே, நேரகாலத்துடன் சென்று வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம். வாக்களிப்புக்கு தேவையான ஆவணங்களையும், சுகாதார வழிகாட்டல்களையும் உரிய வகையில் கடைபிடிக்குமாறும் கோருகின்றோம்.
எஸ்.பிரதா
வட்டகொடை