“ஆப்கான் நெப்போலியன்” ஆண்ட பஞ்ஷிர் மண் தலிபான் வசமாகுமா?

ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்களது பிடியில் வீழ்ந்து விட்டதாகக் கூறப் பட்டாலும் அங்கு ஒரு மலைப் பிரதேசம்இன்னமும் அவர்களுக்கு அடி பணிய மறுத்து நீண்ட யுத்தத்துக்குத் தயாராகிவருகிறது. அதுதான் பஞ்ஷிர் பள்ளத்தாக்கு.(Panjshir Valley). அதனைக் கைப்பற்றுவதற்காகத் தனது படைகள் புறப்பட்டுள்ளன என்ற தகவலை தலிபான் இயக்கம் வெளியிட்டிருக்கிறது.

காபூல் நகரில் இருந்து வடக்கே 150 கிலோ மீற்றர்கள் தொலைவில் நாட்டின் வடக்கு மத்திய பிராந்தியத்தில்- பாகிஸ்தான் எல்லையோரம்- அமைந்துள்ளது பஞ்ஷிர் பள்ளத்தாக்கு. மத்திய ஆசியாவின் பாரம்பரிய இனக் குழுமங்களில் ஒன்றாகிய தஜிக்(Tajiks) மக்கள் அடர்த்தியாக வசிக்கின்ற மலைப் பள்ளத்தாக்கு அது.

ஆப்கானிஸ்தானைப் “பேரரசுகளின் கல்லறை” என்று கூறினால் பஞ்ஷிர் பள்ளத்தாக்கு அதன் இருதயம் போன்றது. அங்குள்ள மக்களுக்கென்று சிறப்பான தனித்துவம் இருக்கிறது. பல தசாப்தங்களாக ஆப்கானிய கெரில்லாப் போர்களின் அடக்க முடியாத மையமாக அது விளங்கி வருகிறது. மனத் திடமும் மலைகளின் அரணும் கொண்டபஞ்ஷிர் மக்களை வல்லரசுகளால் கூடவெல்ல முடியவில்லை.

பஞ்ஷிர் என்றால் ‘ஐந்து சிங்கங்கள்’ என்று அர்த்தம். 19 ஆம் நூற்றாண்டில்ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் பஞ்ஷிர் பள்ளத்தாக்கை வெற்றிகொள்ள முடியவில்லை.

அதன் பிறகு 1980 களில் சோவியத் யூனியன் படைகளது ஆக்கிரமிப்பின் போதும் அவர்களால் பள்ளத் தாக்கை நெருங்கமுடியாமற் போனது. அதற்குக் காரணமாக விளங்கியவர்தான் “பஞ்ஷிர் சிங்கம்” (“Lion of Panjshir”) என அழைக்கப்பட்ட அஹ்மத் ஷா மசூத் (Ahmad Shah Massoud) ஆப்கானிஸ்தானின் “நெப்போலியன்” என்றும் அவரைக் குறிப்பிடுகிறார்கள்.

பத்து ஆண்டுகால ஆப்கான் – சோவியத்யுத்தத்தின் போது அஹ்மத் ஷா மசூத் தலைமையிலான முஜாஹிதீன் போராளிகளது கடும் எதிர்ப்பை சோவியத் படை கள் பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் எதிர்கொள்ள நேர்ந்தது.

1996-2001 வரை நீடித்த தலிபான்களது முதலாவது ஆட்சியின் போதும் அவர்களால் அந்தப் பிரதேசத்தைக் கைப்பற்ற முடியாமற் போனது. அக்காலப் பகுதியில் ஆப்கானிஸ்தானின் பல்வேறு ஆயுதக் குழுக்களை ஒன்று திரட்டிய அஹ்மத் ஷா,வடக்குக் கூட்டணி என்ற பெயரில் நாட்டின் முப்பது சதவீதமான சனத்தொகையை உள்ளடக்கியவடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைத்தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தார்.

பின்னாளில் ஆப்கானின் புகழ் மிக்க அரசியல் தலைவராக மாறியிருந்த அஹ்மத் ஷா மசூத், 2001 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 11 தாக்குதலுக்கு இரு தினங்களுக்கு முன்பாகப் படுகொலை செய்யப்பட்டார். நேர்காணல் ஒன்றுக்காக சந்திக்கச் செல்வதாகக் கூறி போலியாக செய்தியாளர் வேடத்தில் அவரை நெருங்கிய அல்கெய்டா தற்கொலைதாரி ஒருவர் தனது கமராவில் ஒளித்து வைத்திருந்த குண்டை வெடிக்கச் செய்து அஹ்மத் ஷாவைக் கொன்றார்.

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்பதை முன்கூட்டியே கணித்துக் கூறியிருந்த காரணத்தினாலேயே அவர் இலக்கு வைக்கப்பட்டார் என்று அச்சமயம் கூறப்பட்டது. மறைந்த பின்னரும் அஹ்மத் ஷா மசூத் அவர்களை பஞ்ஷிர் பள்ளத்தாக்கு மக்கள் தொடர்ந்தும் தங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.

பள்ளத்தாக்கினுள் செல்லுகின்ற நெடுஞ்சாலைகளின் வரவேற்பில் அவரது பிரமாண்டமான உருவப் படங்களை இன்றும் காணமுடிகிறது. பஞ்ஷிர் மண்ணின் சிங்கம் அஹ்மத் ஷா மசூத்துக்குப் பின்னர் அவரது இடத்தை அவரது புதல்வர்களில் ஒருவரான அஹ்மத் மசூத்(Ahmad Massoud) தன் வசம் வைத்துக் கொண்டு தந்தையின் காலடிச் சுவடுகளைப் பின் தொடர்கிறார்.

ஆப்கானிஸ்தானை ஆழ நினைக்கின்ற உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகின்ற பஞ்ஷிர் பிரதேசம் ஆப்கானிஸ்தானில் எவ்வாறான ஆட்சி அமைய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்ற பகுதியாக இருக்கிறது. தனியான சுயாட்சி உள்ள ஒரு பிராந்தியமாக அதனை அங்கீகரிக்குமாறு அதன் தலைவர்கள் கோரிவருகின்றனர்.

தலிபான்களிடம் இருந்து தப்பிய அரசபடையினர், தலிபான்களால் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக உணர்கின்ற ஏனைய பகுதிகளைச் சேர்ந்த ஆப்கான் வாசிகள், தலிபான் எதிர்ப்பு சக்திகள் அனைவரும் தற்சமயம் பஞ்ஷிர் பள்ளத்தாக்கு மக்களுடன் அணி திரண்டுள்ளனர். தலிபான் படைகளை எதிர்கொள்வதற்கான முன் ஆயத்தங்களிலும் பயிற்சிகளிலும் ஈடுபட்டுள்ள அவர்கள் “தேசிய எதிர்ப்பு முன்னணி” (National Resistance Front) என்ற பெயருடன் அழைக்கப்படுகின்றனர்.

காபூலில் இருந்து விரட்டப்பட்ட முன்னாள் ஆப்கான் அரசின் துணை அதிபர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர், தளபதிகள் எனப் பலரும் கூட பஞ்ஷிர் பகுதியிலேயே தலைமறைவாகி உள்ளனர். தலிபான்களுடன் மோதுவதற்கு முன்பாக அவர்களுடன் தாங்கள் பேச்சு நடத்த விரும்புவதாக தேசிய எதிர்ப்பு முன்னணியின் பேச்சாளர் கூறியிருக்கின்றார்.

ஆப்கானிஸ்தானில் ஜனநாயக விழுமியங்களுடனான ஆட்சியை அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் ஏற்படுத்த வேண்டும். அங்கு இஸ்லாமிய ஷரியாச் சட்டங்களுக்கு ஒரு வரையறை வகுக்கப்படவேண்டும் என்பது பஞ்ஷிர் அரசியல்தலைமையின் எதிர்பார்ப்பு.

பஞ்ஷிர் பிரதேசத்தை வெல்வதற்கு தலிபான்களுக்கு கிடைத்திருக்கின்ற இரண்டாவது சந்தர்ப்பம் இது. மின்னல் வேகத்தில் நாடு முழுவதையும் கைப்பற்றிவிட்ட அவர்கள் இப்போது பஞ்ஷிரைச் சுற்றி வளைத்துள்ளனர்.

அங்குள்ள தலிபான் எதிர்ப்பு முன்னணிப் படைகளுக்கு முன்பு போல வெளியே இருந்து ஆயுத உதவிகள் மற்றும் விநியோகங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை. அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் தங்களுக்கு உதவவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதற்கு முன்பு பஞ்ஷிர் தலைமைக்கு ஈரானின் ஆதரவு இருந்து வந்தது. இப்போது ஈரான் தலிபான் தலைமைக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தி உள்ளது.

மலை சார்ந்த இயற்கையான பாதுகாப்பு அரண்களால் சூழப்பட்ட பஞ்ஷிர் தலிபான்களிடம் வீழ்ந்தாலும் அவர்கள் அங்குநீண்டதொரு கெரில்லா எதிர்ப்புப் போரைத் தொடரவேண்டி வரலாம் என்று அவதானிகள் குறிப்பிடுகின்றனர். எது நேர்ந்தாலும் எதிர்த்துப் போரிட்டு மடிவது என்பதில் உறுதியாக நிற்கும் பஞ்ஷிர் தலைவர் அஹ்மத் மசூத், “ஆப்கானிஸ்தானின் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்காத கடைசித் துண்டு நிலமாக பஞ்ஷிர் விளங்கும்” என்று உறுதிபடக் கூறியிருக்கிறார்.பஞ்ஷிர் வீழுமா? உலகம் அதை உற்று நோக்கியவாறு உள்ளது.

 

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles