‘குடா ஓயா ஆற்றில் குப்பை கொட்டப்படுவதால் மகாவலி ஆற்று நீரும் மாசுபடுகின்றது’ – மக்கள் விசனம்

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் குடாஓயா பகுதியில் மகாவலி ஆற்றுக்கு நீர் வழங்கும் ஆறுகளில் கிளை ஆறான குடாஓயா ஆற்றில் மக்கள் குப்பைகளை கொட்டுவதால் மகாவலி ஆற்றின் நீர் அசுத்தப்படுவதாக விமசனம் தெரிவிக்கப்படுகின்றது.

ஹட்டன் – டிக்கோயா நகரசபை பகுதியில் குவியும் கழிவுகளை கொட்டும் இடமாக கடந்த காலங்களில் குடாஓயா குப்பைக்குழி காணப்பட்டது. இதனால் சுற்றுப்புற சூழலுக்கு பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டன.

மகாவலி ஆற்றுநீர் அசுத்தமடைந்ததுடன், நுவரெலியாவுக்கு செல்லும் பிரதான பாதையில் குறித்த குப்பைக்குழி அமைந்திருந்ததாலும் மக்கள் வாழும் பகுதியில் குறித்த குப்பைக்குழி காணப்பட்டதனாலும் பொது மக்கள் பல்வேறு போராட்டங்களை செய்து குறித்த இடத்தில் குப்பை கொட்டுவதனை நிறுத்தினர்.

இந்நிலையில் பிரதேசத்தில் உள்ள ஒரு சிலரும் வீதியில் செல்பவர்களும் குறித்த பாலம் அமைந்துள்ள பகுதியில் எவரும் இல்லாத நேரத்தில் குப்பைகளை வீசிவிட்டு செல்வதாகவும் இதனால் மீண்டும் சுற்றுப்புற சூலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மகாவலி கங்கையின் நீர் அசுத்தமடையக்கூடிய நிலை காணப்படுவதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

மகாவலி கங்கை நீர் அசுத்தமடைவதனால் இந்த நீரினை விவசாயத்திற்காகவும் ,குடிநீருக்காகவும், ஏனைய தேவைகளுக்காகவும் பயன்படுத்துகின்ற பொது மக்கள் நோய்வாய்ப்படும் அபாயம் காணப்படுவதாக பொது மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்

எனவே இந்த பகுதியில் குப்பைகளை போடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் குப்பை போடுவதனை நிறுத்தப்பட வேண்டும் எனவும் பொது மக்கள வேண்டுகோள் விடுக்கின்றனர்.

கே. சுந்தரலிங்கம், ஹட்டன்

Related Articles

Latest Articles