அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள்மீது 06 ஆம் திகதி சபையில் விவாதம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் கடந்த 30ஆம் திகதி அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரகடனத்தை எதிர்வரும் 06ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை விவாதித்து சபையில் அனுமதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தெரிவித்தார்.

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 02வது பிரிவினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதற்காக இந்த அவசரகால சட்ட ஒழுங்குவிதி அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது.

அத்துடன், தற்பொழுது நிலவும் கொவிட் 19 சூழ்நிலையைக் கவனத்தில் கொண்டு அடுத்த வாரத்தில் நாடாளுமன்ற அமர்வுகளை 06 மற்றும் 07ஆம் திகதிகளில் மாத்திரம் நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

Related Articles

Latest Articles