கொரோனாவைக் காரணம் காட்டி தோட்டத் தொழிலாளர்கள் நிர்வாகிகளால் வஞ்சிக்கப்படுவதற்கு எதிராக தொழில் திணைக்களமும் தொழில் அமைச்சும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன் பொதுச் செயலாளர் எஸ். இராமநாதன் கோரியுள்ளார்.
இது தொடர்டபாக அவர் தொழிற் திணைக்கள செயலாளர் நாயகத்துக்கும் தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவுக்கும் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளார். அவரது கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
இன்று ‘கொரோனாவை காரணம் காட்டி தோட்ட நிர்வாகிகள் தொழிலாளர்களை பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக்கி வருகின்றனர். மேலும் தோட்டக் கம்பனிகள் தன்னிச்சையாக கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.
கூட்டு ஒப்பந்தம் மூலம் தொழிலாளர்கள் அனுபவித்து வந்த பல்வேறு சலுகைகளை இன்று தொழிலாளர்கள் இழந்துள்ளனர். கூட்டு ஒப்பந்தம் ஒன்று நடைமுறையில் இல்லாத காரணத்தினால் தோட்ட நிர்வாகிகள் தீர்மானிக்கும் எல்லா முடிவுகளுக்கும் தொழிலாளர்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற சர்வாதிகார ரீதியில் செயற்படுகின்றனர். தொழிலாளர்களுடைய அதிகரித்த நாட் சம்பளத்தை குறைக்கும் நோக்கோடு கூடுதலான அளவு கொழுந்து இறப்பர் பால் கொண்டு வரவேண்டும் என உத்தரவிடுகின்றனர்.
அவ்வாறு தோட்ட நிர்வாகிகள் தீர்மானிக்கும் கொழுந்து இறப்பர் பால் அளவை தொழிலாளர்களால் கொண்டு வரமுடியாவிட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்றனர். சம்பளத்தை கிலோவுக்கு 40 என்ற அடிப்படையில் வழங்குதல், வேலை நாட்களைக் குறைத்தல் ஞாயிற்றுக் கிழமைகளில் வேலை, வேலை நிறுத்தம் பாேன்ற நடவடிக்கைகளை மேற்காெள்கின்றனர்.
இவ்விடயத்தில் கம்பனி தோட்ட துரைமார்கள் மாத்திரமின்றி அரச தோட்டங்களிலும் இவ்வாறான அத்துமீறிய செயல்கள் இடம்பெற்று வருகின்றன. இவை சம்பந்தமாக நாம் தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை கூட்டங்களிலும் சுட்டிக்காட்டி வந்துள்ளோம். இதற்கு ஒரே வழி மீண்டும் கூட்டு ஒப்பந்ததை அமுலுக்குக் கொண்டு வருவதேயாகும் எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.