இலங்கையின் தலைவிதியை ஐ.நா. நிர்ணயிக்க முடியாது – விமல் சீற்றம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் இலங்கையின் தலைவிதியை நிர்ணயிக்க ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது – என்று அமைச்சர் விமல் வீரவன்ச  சூளுரைத்தார்.

21/4 தாக்குதல் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடர் ஆகியன தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே விமல்வீரவன்ச இவ்வாறு சூளுரைத்தார். இவை தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 21/4 தாக்குதலுக்கு பொறுப்புக்கூறவேண்டிய அனைவரும் கைது செய்யப்படவில்லை என கூறுபவர்களிடம், இன்னும் கைதாகாமல் எஞ்சியிருப்பது யார் என கேட்கின்றோம். அவ்வாறானவர்கள் தொடர்பான தகவல்களை நாட்டுக்கு பகிரங்கப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

ரிஷாட் பதியுதீன், அசாத் ஸாலி போன்றவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். எந்த காரணத்துக்காக இவர்கள் கைதானார்கள்? உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாலேயே கைது செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் இவர்கள் பலம்பொருந்திய நபர்கள் இல்லையா?

அதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் ஏதேனும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவது வழமையான நடவடிக்கையாகும். இவ்வாறு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை தடுக்கமுடியாவிட்டாலும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் இலங்கையில் தலைவிதியை நிர்ணயிக்க இடமளிக்கமாட்டோம்.” -என்றார்.

Related Articles

Latest Articles