இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானின் அரசியல் பயணத்தை பலப்படுத்துவதற்காக இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் சகோதர இனங்களைச்சேர்ந்த இளைஞர்களும் அவருக்கு பேராதரவை வழங்குவதற்கு முன்வந்துள்ளனர். இதனால் இளைஞர்கள் மத்தியில் ஜீவனுக்கான ஆதரவு அலை கோலோச்சியுள்ளது.
பொதுத்தேர்தலுக்கான வெற்றிப்பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுவரும் ஜீவன் தொண்டமானுக்கு நாளுக்கு நாள் பல தரப்பினரும் நேசக்கரம் நீட்டிவருகின்றனர். சர்வமத பிரதிநிதிகள் நேற்று ஆதரவு வழங்கிய நிலையில் இன்று பல இளைஞர்கள் ஜீவனுக்காக அணி திரண்டனர்.
நுவரெலியா மாவட்டத்தில் நான்கு தேர்தல் தொகுதிகளிலும் உள்ள இளைஞர், யுவதிகள், இளைஞர் தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதனை பலப்படுத்துவதற்கு ஓரணியில் திரண்டது வரவேற்கத்தக்க விடயம் என்றும், புதியதொரு அரசியல் கலாச்சாரத்துக்கு வழிவகுக்கும் என்றும் சிரேஷ்ட அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஜீவனுக்கான ஆதரவு தொடர்பில் கருத்து வெளியிட்ட சகோதர இனங்களைச்சேர்ந்த இளைஞர்கள்,
” தேர்தல் காலங்களில் பலர் இனவாதம் பேசி, இளைஞர்களை பிரித்தாள்வதற்கு முயற்சிக்கின்றனர். இம்முறையில் பல அரசியல்வாதிகளின் உரைகள் அவ்வாறே அமைந்துள்ளன. ஆனால், அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவ்வாறு அல்ல. இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் மனிதநேயத்தை நேசித்தவர். நுவரெலியா மாவட்டத்தில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் சேவைகளை வழங்கியவர். அவருக்கான இறுதி அஞ்சலி நிகழ்வில் உரையாற்றிய சர்வமதத் தலைவர்கள், இதனை மிகவும் தெளிவாக குறிப்பிட்டிருந்தனர்.
ஜீவன் தொண்டமானும் அனைவரையும் அரவணைத்துக்கொண்டு முன்நோக்கி செல்லவே முயற்சிக்கின்றார். அவரிடமும் பிரிவினைவாதம் கிடையாது. இப்படியொரு இளைஞர்தான் தலைமை வகிக்கவேண்டும். அப்போதுதான் இளைஞர் சக்திகளை ஓரணியில் திரட்ட முடியும். அதனை உணர்ந்துள்ளதாலேயே ஜீவனுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி ஆதரவு வழங்க சுயேட்சையாகவே முன்வந்துள்ளோம்.
மலையகத்தில் நாமும் மாற்றத்தை எதிர்பார்க்கின்றோம். அந்த மாற்றம் என்பதற்குள் அனைவரும், அனைத்தும்பெற்று சமமாக வாழும் நிலை உருவாகவேண்டும் என்ற விடயமும் உள்ளடங்கவேண்டும். அதனை ஜீவன் செய்வார் என்ற முழு நம்பிக்கையும் உள்ளது.” – என்றனர்.