” இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் ‘அரசியல் கோட்டை’யே புரட்டொப்பகுதி. அங்கு மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், தோட்ட கம்பனியின் தேவைக்கேற்ப பொலிஸ் நிலையமொன்று அமைக்கப்பட்டுவருகின்றது. இதற்கு இ.தொ.காவும் துணைநிற்கின்றது.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித் தலைவர் பா. சிவநேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் ஐயாவின் தோட்டமான புரடொப் தோட்டத்தில், தம்ரோ நிறுவனம் தமது செல்வாக்கை பயன்படுத்தி, பொலிஸ் நிலையம் ஒன்றை அமைத்து வருகின்றது என்று தோட்ட மக்கள் விசனம் அடைந்துள்ளனர்.
பொலிஸ் நிலையகத்தை அமைக்க, தம்ரோ நிறுவனம் தோட்ட
வளங்களை பயன்படுத்துகின்றனர். இது சம்பந்தமாக இராஜாங்க அமைச்சர் ஜீவனிடம் முறையிட்டபோதும் அவர், தெளிவான பதிலை வழங்கவில்லை என மக்கள் அதிருப்தி அமைந்துள்ளனர்.

மலையகத்தில் தோட்டப் பகுதியில் பொலிஸ் நிலையம் அமைப்பதற்கான ஆதரவை வழங்கியது யார் ? மக்களுக்கு இன்னும் 7 பேர்ச்சஸ் காணியைக்கூட வாங்கிக்கொடுக்க முடியாத ஜீவன் இதனை எப்படி அனுமதித்தார்? தோட்ட நிர்வாகத்துடன் இணைந்து மக்களை ஒடுக்க பார்க்கின்றாரா?
இ.தொ.கா இளைஞர் அணியினரே நீங்களும் இதற்கு துனையா?
உங்கள் தலைவர் ஜீவனுக்கு எமது மக்களின் வாழ்க்கை வரலாறு தெரியாது.” – என்றார்.










