கெரவலப்பிட்டிய ‘யுகதனவி’ மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ‘மொட்டு’ அரசியல் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
‘யுகதனவி’ திட்டத்தின் ஊடாக இலங்கையில் எரிவாயு விநியோகத்தை மேற்கொள்வதற்கான ‘நிறைவேற்று அதிகாரம்’ அமெரிக்க நிறுவனத்தின் கைகளுக்குள் சென்றுவிடும் எனவும், அது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக அமைந்துவிடும் எனவும் பங்காளிக்கட்சிகள் அபாய சங்கு ஊதியுள்ளன.
மறுபுறத்தில் மின்சார சபை ஊழியர் சங்கம் உட்பட மேலும் பல தொழிற்சங்கங்களும் இத்திட்டம் அரசு வசமே இருக்க வேண்டும் எனவும், அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் முயற்சி தோற்கடிக்கப்படும் எனவும் சூளுரைத்துள்ளன.
அமெரிக்க நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கைக்கு தடை உத்தரவுகோரி சில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், சிவில் அமைப்பினரும், மதத் தலைவர்களும் உயர்நீதிமன்றத்தில் மனுக்களை சமர்ப்பித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘யுகதனவி’ தொடர்பில் அமெரிக்க நிறுவனத்துடன் ஆரம்பக்கட்ட உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளதுடன், திருட்டுத்தனமாகவே இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

” ஆரம்ப உடன்படிக்கை மட்டுமே தற்போது கைச்சாத்திடப்பட்டுள்ளது. அடுத்து கைச்சாத்திடப்பட்டுள்ள இரு உடன்படிக்கைகளே முக்கியமானவை. எம்மிடமிருந்தும் யோசனைகள் கோரப்பட்டுள்ளன.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர அறிவித்துள்ளார்.
ஆரம்பக்கட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கையின் மின்கட்டமைப்புக்கு தேவையான எரிவாயு உட்பட எரிவாயுவை விநியோகிக்கும் அதிகாரம் ஆயுள் முழுதும் அமெரிக்க நிறுவனம் வசம் சென்றுவிடும் என்பதால், இத்திட்டத்தை தோற்கடிக்க வேண்டும். அதற்காக மக்களும் அணிதிரள வேண்டும் என அமைச்சர் உதய கம்மன்பில அறைகூவல் விடுத்துள்ளார்.
‘மக்கள் சபை’ எனும் தலைப்பின்கீழ் பங்காளிக்கட்சிகளின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கானது, மொட்டு அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள ‘சிவப்பு’ எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகின்றது.
‘யுகதனவி’ மின் உற்பத்தி நிலையம் அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டால் அரசிலிருந்து வெளியேறுவது உறுதி என்பதை பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் தமது உரைகள்மூலம் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் உணர்த்தி இருந்தனர்.
” அமைச்சு பதவிக்காக, மனசாட்சியை அடகுவைக்கமுடியாது. நாட்டுக்காக அமைச்சு பதவியை அல்ல, எந்தவொரு தியாகத்தையும் செய்வதற்கு தயார்.” – என்று அறிவிப்பின்மூலம் இது உறுதியாகின்றது.
2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவானது, கூட்டணி அமைத்து மொட்டு சின்னத்தில் போட்டியிட்டது. அக்கட்சி 17 போனஸ் ஆசனங்கள் உட்பட 145 ஆசனங்களைப் பெற்றது.
பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிட்டிருந்தாலும், தேர்தலின் பின்னர் ஈபிடிபி, தேசிய காங்கிரஸ், எமது மக்கள் சக்தி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆகியன மொட்டு அரசுக்கு ஆதரவு வழங்கின. சில மாவட்டங்களில் மட்டும் தனித்து போட்டியிட்ட சுதந்திரக்கட்சி, யாழ். மாவட்டத்தில் ஒரு ஆசனத்தைக் கைப்பபறியது. இதன்பிரகாரம் 151 ஆசனங்கள் (அதாவது நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன்) ஆட்சி சகிதம் மொட்டு கட்சி ஆட்சி அமைத்தது.

அத்துடன், புத்தளம் மாவட்டத்தில் தனித்து போட்டியிட்ட முஸ்லிம் தேசிய கூட்டணியும் (ஒரு ஆசனம்) அரசுக்கு ஆதரவு வழங்கிவருகின்றது. எதிரணியில் இருந்தாலும் முக்கியமான சட்டமூலங்கள் வரும்போது ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ரவூப் ஹக்கீமின் முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன அரசுக்கு ஆதரவாக வாக்களித்துவருகின்றன. (இரு கட்சிகளின் தலைவர்களைத்தவிர ஏனைய எம்.பிக்கள் ஆதரவளிக்கின்றனர்)
ஆக நாடாளுமன்றத்தில் அரசுக்கு ஆதரவாக 158 பேர் செயற்படுகின்றனர். எனவே, மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பெறுவதென்பது சவாலுக்குரிய விடயமாக இருக்கவில்லை.
ஆனால் ‘யுகதனவி’ விவகாரத்தில் (தற்போதைய நிலையில்) அரசு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி (14 எம்.பிக்கள்), தேசிய சுதந்திர முன்னணி ( 4 எம்.பிக்கள்), லங்கா சமசமாஜக்கட்சி (தேசியப்பட்டியல்), இலங்கை கம்யூனிஸ் கட்சி (ஒரு ஆசனம்), தூய ஹெல உறுமய கட்சி (ஒரு ஆசனம்), தேசிய காங்கிரஸ் (ஒரு ஆசனம்), எமது மக்கள் சக்தி (ஒரு ஆசனம்) ஆகியன அரசின் திட்டத்தை எதிர்த்துள்ளன. ‘செய் கடமை’ எனும் அமைப்பின் கெவிந்துகுமார துங்கவும். எதிர்ப்பு,
தினேஸ் குணவர்தனவின் கட்சி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈபிடிபி ஆகியன தமது நிலைப்பாடுகளை இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அக்கட்சிகள் அரசுக்கு ஆதரவு வழங்கினால்கூட மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லை (யுகதனவி விவகாரத்தில்).
சிலவேளை, எதிரணியை பிளவுபடுத்தி, எம்.பிக்களை விலைக்கு வாங்கிவேண்டுமானால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை ஆளுந்தரப்பு உருவாக்கிக்கொள்ளமுடியும்.
பங்காளிகளை பகைத்துக்கொண்டு அரசால் முன்னோக்கி பயணிப்பது கடினம். சிங்கள, பௌத்த வாக்குகளை வேட்டையாடக்கூடிய வல்லமை விமல் வீரசன்ச, கம்மன்பில உள்ளிட்ட தரப்பினருக்கும், தேசியவாத அமைப்பினருக்குமே உள்ளது. எனவே, இத்தரப்புகளை பகைத்துக்கொள்வதற்கு மொட்டு கட்சி முற்படாது என்பதே என் கருத்து.
‘யுகதனவி’ ஒப்பந்தத்தை இலங்கைக்கு சாதகமான விதத்தில் மாற்றியமைத்தால் முதலீடுகள் மேற்கொள்ள அமெரிக்க நிறுவனம் பின்வாங்கும். ஆக இது விடயத்தில் அரசு என்ன செய்யப்போகின்றது?
