” கொரோனாவுக்கு மத்தியிலும் அன்று இந்திய விவசாயிகள் டில்லியை சுற்றிவளைத்தனர். அதேபோல எதிர்வரும் 16 ஆம் திகதி நாம் கொழும்பை சுற்றிவளைப்போம். எந்தவொரு தண்டனையையும் ஏற்க தயார் நிலையிலேயே இருக்கின்றோம்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இந்த அரசுக்கு எதிராக எதிர்வரும் 16 ஆம் திகதி கொழும்பு, ஹைட் பார்க் மைதானத்தில் ஐக்கிய மக்கள் சக்தியால் எதிர்ப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை குழப்புவதற்காக கொரோனா சட்டத்தை அரசு கையில் எடுத்துள்ளது.
வழமையாக கட்டுப்பாடுகளை விதிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளரே அரசிடம் கோருவார். ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்துக்கு அஞ்சி, புதிய கட்டுப்பாடுகளை அறிவிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அரசு அறிவித்துள்ளது.
எத்தடை வரினும் எமது போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை. அன்று டில்லியை இந்திய விவசாயிகள் சுற்றிவளைத்ததுபோல கொழும்பை நாம் சுற்றிவளைப்போம். இதற்காக சிறைச்சாலை செல்ல வேண்டிவரும். அதற்கு நாம் தயார். சிறைச்சாலை செல்லாமல் அரசியல் சச்ய முடியாது. ஹெட் பார்க்கில் அனுமதி மறுக்கப்படுமானால் முழு கொழும்பையும் ஹெட் பார்க்காக மாற்ற வேண்டிவரும்.
இப்போராட்டத்தில் பங்கேற்று அனைத்து மக்களும் அரசுக்கான தமது எதிர்ப்பை வெளியிட வேண்டும்.”- என்றார்.