‘யானை மிதித்தால் மொட்டு நசுங்கிவிடும்’ – ஆனந்தகுமார்

” எனக்கு எதிர்ப்பு அரசியல் பிடிக்காது. இந்த மாவட்டத்தில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு என்ன செய்யவேண்டும். எதிர்கால திட்டங்கள் என்ன? என்பது தொடர்பில் தெளிவுபடுத்தவே காத்திருந்தேன்.

ஆனால், நான், போட்டியிடும் சின்னமான, யானையை இந்த மாவட்டத்திலிருக்கும் அக்கா கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த யானையின் பலம் அந்த அக்காவுக்கு தெரியாது என இரத்தினபுரி மாவட்ட ஐ.தே.க வேட்பாளர் எஸ். ஆனந்தகுமார் தெரிவித்தார்.

யானை மித்தால், மொட்டு நசுங்கிவிடும் என்பதை இவ்விடத்தில் கூறிக்கொள்ள விருப்புகின்றேன்.

இறக்குவானையில் இன்று (06) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எஸ். ஆனந்தகுமார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

உங்களுக்கு எல்லோருக்கும் தெரிந்திருக்காது. ஐக்கிய தேசிய கட்சி, நடமாடும் பிணமாய் அலையும் இறந்தக் கட்சியாகும் என, அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். அவர், எங்கிருந்து வந்தார் என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

பதவிக்காக யானை ஒருபோதும் சோரம்போனதில்லை. எதிர்காலத்திலும் போகாது. ஆனால், பவித்ரா வன்னியாரச்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கையை காட்டிக்கொடுத்துவிட்டு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டுக்கு முட்டுக்கொடுத்து கொண்டிருக்கின்றார்.

ஐ.தே.வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார திட்டத்தினால்தான், ஓரளவுக்கு நாடு நிமிர்ந்து நிற்கிறது. இல்லையேல், கொரோனாவின் தாக்கத்தில், ஒருவேளை உணவை உண்பதற்கு கூட வக்கில்லாது. பட்டியினால் செத்து மடிந்து வீதியோரங்களில் பல பிணங்கள் கிடந்திருக்கும். ஒவ்வொரு வீட்டு சமையலறைகளிலும் அடுப்பு எரிகிறது என்றால், அது தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தயவால் என்றார்.

யானையின் பலம் யாருக்கும் தெரியாது. சீண்டிவிட்டால் அங்குசத்துக்கு கூட அடங்காது. இரத்தினபுரியில் காட்டு யானைகள் இல்லை. அதனால், யானையின் பலம் எல்லோருக்கும் தெரியாது. இரத்தினபுரி மாவட்டத்தில் சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெற்று, குறிப்பாக, தோட்டத்தொழிலாளர்கள், முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்று, பாராளுமன்றத்துக்குச் சென்று, எம்மக்களை மறந்தவர்களே இங்கிருக்கின்றனர்.

எங்களுடைய மக்களுக்கு அவர்கள் மட்டுமல்ல. மலையகத்தில் பழம் தின்னும் கொட்டை போட்டதாகக் கூறப்படும் மலையக அரசியல்வாதிகள் கூட, இரத்தினபுரி மக்களை மறந்தே விட்டனர். இங்குவாழும் சிறுபான்மை மக்களின் மீது கையை வைத்து சீண்டும் போதெல்லாம். அதற்கெதிராக நாமே குரல் கொடுத்தோம் என்பதை இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் மத்தியில் முடியுமானால் பெருமளவான வாக்குகளை பெற்று காட்டுமாறு பவித்ரா வன்னியாராட்ச்சிக்கு பகிரங்க சவால் விடுப்பதாகவும் எஸ்.ஆனந்தகுமார் குறிப்பிட்டார்

Related Articles

Latest Articles