ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி…

மலர்ந்துள்ள புத்தாண்டு, எதிர்காலத்தைப் புதிய உத்வேகத்துடனும் நம்பிக்கைமற்றும் உறுதியுடனும் பார்க்கத் தூண்டியிருக்கிறது. அதனால், 2022ஆம் ஆண்டை, மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் வரவேற்போம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது புதுவருட வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.

தனது வாழ்த்துச்செய்தியில் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது,நாட்டின் மீதும் எமது சமூகத்தின் மீதும் கடந்த ஆண்டு ஏற்படுத்தியிருந்த தாக்கத்தை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும். எதிர்காலப் புத்தெழுச்சிக்காக நாம் உறுதியுடன் இருக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன்.

இந்தச் சவால்களைத் தொடர்வதற்கும் வெற்றிகொள்வதற்கும், மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, புதிய ஆண்டு வாய்ப்பளிக்கும் என்று நான் நம்புகிறேன்.

தொற்றுப் பரவல் காரணமாக முடங்கியுள்ள பொருளாதாரம், இயல்பு வாழ்க்கை என்பன இதன் மூலம் பாதுகாக்கப்படும். அதற்காகத் திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை, புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் செயற்படுத்த எம்மால் முடியும். தன்னம்பிக்கை, அர்ப்பணிப்பு மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் மூலமே அவ்வாறான எழுச்சியை நோக்கிப் பயணிக்க முடியும். வெற்றிகொண்ட சவால்களைப் போன்றே, பெற்றுக்கொண்ட அனுபவங்களும் இப்புத்தாண்டில் நம்மை ஊக்குவிக்கும்.

உலகளாவிய தொற்றுப் பரவல், பொதுமக்களின் அபிலாஷைகளை அடைவதற்கான முன்னேற்றத்தை மோசமாகப் பாதிக்கச் செய்துள்ளது. இவ்வாறான நிலைமையிலும், தேசிய பாதுகாப்பு மற்றும் சகவாழ்வு என்பன நிலைநாட்டப்பட்டுள்ளன. பல புதிய சீர்த்திருத்தங்கள் உருவாக்கப்படுகின்றன.

செயலற்றிருந்த அரச மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மீண்டும் செயற்படுத்தவும் அவற்றைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுசெல்லவும் தற்போதைய அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொவிட்19 தொற்றுப் பரவல் காரணமாக இலங்கை மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தப்பட்டிருந்த பாதக நிலைமைகளைச் சீர்செய்வதற்கு அரசாங்கம் என்ற வகையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், உலகளாவிய ரீதியில் பாராட்டுகளைப் பெற்றிருக்கின்றன.

தொற்றுப் பரவலுக்கு மத்தியில் நீங்கள் தற்போது அனுபவித்துவரும் சுதந்திரம், இந்நாட்டு மக்களின் மகத்தான தியாகத்தின் பிரதிபலனாகும் என்பதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுக்கொள்கிறேன்.

மக்களைப் பாதிப்படையச் செய்யும் அடிப்படையற்ற அரசியல் போராட்டங்கள், நாட்டை நேசிக்கின்ற பெரும்பான்மையான மக்களால் நிராகரிக்கப்பட்டு உள்ளமையானது, அரசாங்கத்தின் மீது அம்மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை உறுதி செய்துள்ளது.

கடந்த காலம் முதல் தொடர்ந்து பேணப்பட்டு வருகின்ற இராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்திக்கொண்டே புதிய வெளிநாட்டுத் தொடர்புகளையும் கட்டியெழுப்பக் கிடைத்துள்ளமை, எமக்குக் கிடைத்த தனித்துவமான முதலீடாகவே நான் பார்க்கிறேன்.

மலர்ந்துள்ள புத்தாண்டை, மக்களுக்கான “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை திட்டத்தை அடைந்துகொள்வதற்காக அர்ப்பணித்து, மாற்றத்துடன்கூடிய புத்தாண்டாக மாற்ற அணிதிரளுமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன்.

மலர்ந்துள்ள புத்தாண்டு, உங்கள் அனைவருக்கும் ஆரோக்கியமானதும் தைரியமிக்கதுமான புத்தாண்டாக அமைய வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன் என்றும் ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

……….

அனைவரதும் நம்பிக்கைகளையும் பிரார்த்தனைகளையும் நிறைவேறச் செய்யும் 2022 புத்தாண்டு பிறந்துள்ளது.

வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளை அனுபவித்து, மிகுந்த வலிமையுடன் எதிர்கால சவால்களை வெற்றி கொள்வதற்கு உதயமாகியுள்ள இப்புத்தாண்டில் உறுதிகொள்வோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய தொற்று நிலைமையால் கடந்தாண்டில் இலங்கை முகம் கொடுத்த சவால்கள் பலவாகும். சமூக மற்றும் பொருளாதார ரீதியிலான சவால்களை வெற்றி கொள்வதற்கு

ஒரு நாடு என்ற ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்றிய அர்ப்பணிப்பை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாம் மக்களின் பாதுகாப்புக்காகவே கடந்தாண்டில் முன்னுரிமை வழங்கியிருந்தோம். தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை வெற்றிகரமாக செயற்படுத்தியதனூடாக உங்கள் அன்பிற்குரியவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கான நாட்டு மக்களின் உயிரை பாதுகாக்க எமக்கு முடிந்தது.

நாட்டில் இவ்வாறான எவ்வித சவால்களும் காணப்படாத காலப்பகுதியில் கைவிடப்பட்ட பல திட்டங்களை நாம் செயற்படுத்தி அவற்றை கடந்த காலங்களில் மக்களின் பயன்பாட்டிற்காக கையளித்துள்ளோம்.

தொற்று நிலைமைக்கு மத்தியிலும் அந்த எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கையையும் இடைநிறுத்தாது, மக்களின் வாழ்க்கை நிலையை கட்டியெழுப்பி அபிவிருத்தி ஒளியை முழு நாட்டிற்கும் பரப்புவதே எமது அரசாங்கத்தின் எதிர்கால இலட்சியமாகும்.

அதற்காக சமூக பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியாக எம்மத்தியில் காணப்படும் பல்வேறு தடைகளை முறியடிக்க வேண்டும். ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதற்கு பதிலாக சரியானதை தெரிவுசெய்து அதற்காக செயற்படுவதன் ஊடாக தற்போது காணப்படும் பல்வேறு பிரச்சினைகளை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும்.

நாம் நாட்டின் பிரச்சினைகளை விமர்சிப்பவர்களல்ல நடைமுறைச் சவால்களுக்கான தீர்வுகளை உங்களுக்கு வழங்குபவர்கள். அதற்காக நீங்கள் அனைவரும் எதிர்பார்க்கும் புதிய பாதை இன்று உதயமாகும் புத்தாண்டில் வெளிப்படுத்தப்படும்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து தடைகளை முறியடித்து வாழ்வை வெல்லும் ஆண்டாக இப்புத்தாண்டை உருவாக்குவோம். அதற்கு ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் மக்களுக்கு பலமாக விளங்குவதற்கு உறுதியாக அர்ப்பணிப்புடன் செயற்படுவதை நான் நம்பிக்கையும் தெரிவிக்கின்றேன்.

இப்புத்தாண்டில் இலங்கை மக்கள் அனைவரதும் புதியஎதிர்பார்ப்புகளும் பிரார்த்தனைகளும் நிறைவேற வாழ்த்துகிறேன் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

………

வெற்றிகளைவிட ஒரு நாடு என்ற வகையில் தோல்விகள் மற்றும் துன்பங்கள் பலவற்றையும் கடந்து புது வருடமொன்று பிறக்கும் இவ்வேளையில் அனைத்து இலங்கையருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அதிகாரத்தின் நிகழ்ச்சி நிரலை நம் கையில் வைத்துக்கொண்டு இந்த நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள முடியாது, ஆனால் இந்தசீரழிந்த சூழ்நிலையிலிருந்து கூட்டு முயற்சியின் மூலம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

தேசிய பேரழிவு ஏற்பட்டுள்ள இத்தருணத்தில் குறுகிய அதிகார வெறிக்குப் பதிலாக தூய்மையான மக்கள் சார்பு வேலைத்திட்டத்தில் இறங்குமாறு இந்த நாட்டின் பிரஜைகளின் தலைமுறை என்ற வகையில் மீண்டும் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.

உலகின் பல்வேறு நாடுகள் பல்வேறு பேரழிவுகளுக்கு முகம் கொடுத்து எவ்வாறு அந்தத் துன்பங்களில் இருந்து எழுந்து நிற்கின்றன என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.மேலும் இந்த நாட்டின் இரண்டு கோடியே இருபது இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் மற்றும் எதிர்கால சந்ததியின் பெயரால் பொறுப்புடன் செயல்படுவதற்கான முழுமையான வாய்ப்பு வந்துள்ளது என்பதையும் மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.

இந்த துரதிர்ஷ்டவசமான காலத்தில் உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும் புதிய சிந்தனையின் படிப்பினையை இயற்கையே அமைதியாக நமக்குக் கற்றுத் தந்துள்ளது. மேலும் இது பற்றி உறுதியாக சிந்தித்து புத்தாண்டை ஒரு புதிய தொடக்க உணர்வை அடைந்து கொள்ள எம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.

இலங்கையின் அனைத்து அன்புக்குரிய மக்களுக்கும் மீண்டும் ஒரு தேசமாக எழுச்சி பெறுவதற்கான உன்னத அபிலாஷைகளை அடைவதற்கான வலிமையும் தைரியமும் கிடைக்க பிரார்த்திக்கின்றோமென்றும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

……

பிறக்கின்ற ஒவ்வொரு புத்தாண்டும் மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு. மலையக சமூகத்தின் மாற்றத்திற்காகவும், ஏற்றத்திற்காகவும் தம்மை அர்ப்பணித்திருக்கும் இ.தொ.கா எத்தனை சவால்களை எதிர்கொண்டாலும் இடைவிடாது பாடுபடும் என்பதை இப்புத்தாண்டில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் என இ.தொ.கா. பொதுச் செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான, ஜீவன் தொண்டமான் தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது புத்தாண்டுச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது .

எமது மலையக மக்கள் இடர்களை எதிர்கொள்ளும் போதும், சவால்களை சந்திக்கின்ற போதும் அரணாகக் காத்து நின்று துயர்களையும் துடைத்து பாதுகாத்து வந்திருக்கின்றோம். இந்த வரலாற்றுப் பணியை நாம் மேற்கொண்டிருப்பதை வரலாறு சான்றுபடுத்தும். இதன் காரணமாகவே, தெளிந்த சிந்தனையோடும், கொள்கைப்பற்றோடும் மக்கள் எம்பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர். இன்று எம்மக்கள் அனைவருக்கும் சலுகைகள், உரிமைகள், வசதி வாய்ப்புகள் அத்தனையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் சாணக்கியத்தாலும், தொழிற்சங்க போராட்டங்களாலும் பெறப்பட்டவை என்பதை எவரும் மறந்துவிட முடியாது. 2022ம் ஆண்டு நம்பிக்கை வலுவூட்டும் ஆண்டாகவும், மலையக மக்களின் தேவைகளை நிறைவேற்ற வழிகாட்டும் ஆண்டாகவும் திகழவேண்டும். இம்மக்களின் தேவைகளிலும், அவர்களது முயற்சிகளிலும் நாம் கைகொடுப்போம். புதிய ஆண்டில் மலையகமெங்கும் மகிழ்ச்சி பரவட்டும்.

இதேவேளை இன்றைய இளைஞர்கள், நாளைய தலைவர்கள், இவர்களின் எதிர்பார்ப்புகள், விருப்பங்கள், வாஞ்ஞைகள் இவ்வாண்டிலேயே நிறைவேற்றப்பட வேண்டும். இந்த ஆண்டு இளைஞர்களுடைய ஆண்டு. புதிய சகாப்தத்தை படைக்கப் போகும் இவ் அரசாங்கம் இளைஞர்களின் எண்ணங்களை நிறைவேற்றி நம்பிக்கை வலுவூட்டும் ஆண்டாக இந்த ஆண்டை நாம் எதிர்பார்க்கின்றோம்.

இளைஞர்கள் மத்தியில் புதிய யுகத்தைப் படைக்கப் போவது உறுதி. வரலாற்றில் இளைஞர்கள் ஒரு போதும் தவறு இழைக்கக் கூடாது என்பதை இப்புத்தாண்டு செய்தி மூலம் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் மலர வேண்டும்.

…..

புத்தாண்டில் புதிய நம்பிக்கைகளும் உற்சாகமும் பிறக்கட்டுமென இ.தொ.காவின் உபதலைவரும் பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

இனம், மதம், மொழி, நாடு என எல்லா எல்லைகளையும் கடந்து உலகெங்கும் மக்கள் கொண்டாடுகிற நாளாக புத்தாண்டு அமைந்திருக்கிறது.

ஒவ்வொருவருக்கும் வளர்ச்சியையும், உத்வேகத்தையும் தருவதற்கும் இப்புத்தாண்டு நம்பிக்கைகளை விதைக்கட்டும்.

புத்தாண்டு அனைவருக்கும் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தருகிற வளமான ஆண்டாக திகழட்டும் என வாழ்த்துகிறேன் எனவும் அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

..

”2022ஆம் ஆண்டை ஒரு நேர்மறையான மனப்பாங்குடனும், திடவுறுதி மற்றும் அர்ப்பணிப்புடனும் நாம் வரவேற்கிறோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தனது புதுவருட வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டின் விடியல், கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் நாம் எதிர்நோக்கும் சவால்களை சரியாகப் புரிந்துகொண்டு வாழ்க்கையைத் திட்டமிடுவதற்கும், உறுதியுடன் முன்னேறுவதற்கும் எம்மை ஊக்குவிக்கின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் நோய்த்தொற்றினை அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிகொள்ளம். பிறக்கும் புத்தாண்டில் எத்தகைய தடைகளுக்கு முகம்கொடுக்க நேர்ந்தாலும் அவற்றை தோற்கடிக்கும் ஆத்ம பலமும் தைரியமும் எம்மிடம் உள்ளது என்று அனைவரும் உறுதியாக நம்ப வேண்டும். அதற்கு தேவையான திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவதன் ஊடாக அந்த நம்பிக்கையை அடைந்துகொள்ள முடியம்.

அனைவரும் ஒழுக்கப் பண்பாட்டுடன் எமது கடமைகளை சரியாக நிறைவேற்றுவதற்கு இந்த ஆண்டிலும் உறுதிகொள்வோம். மலரும் புத்தாண்டு அனைத்து இலங்கையர்களுக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் நோய்நொடிகள் இல்லாத வளமானதொரு எதிர்காலத்தை கொண்டு வர எனது மனமார்ந்த பிரார்த்தனைகளை மேற்கொள்வோம்” – எனவும் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

…….

” பொருட்களின் விலையேற்றம், பொருள் தட்டுப்பாடு, பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவையால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களை இருள் சூழ்ந்துள்ளது. நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்கு வழி பிறக்காதா என காத்திருக்கின்றனர். எனவே, மலரும் புத்தாண்டாவது மக்களுக்கு மகிழ்ச்சியை தரும் ஆண்டாக அமையட்டும். அதற்கான சூழ்நிலையை அரசு உருவாக்கி கொடுக்க வேண்டும்.”

இவ்வாறு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளரும், ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான வேலாயுதம் ருத்திரதீபன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறியவை வருமாறு,

” 2020 பெப்ரவரி மாதம் முதல் இலங்கையில் கொரோனா தொற்று பரவிவருகின்றது. அன்று முதல் இன்றுவரை குறித்த வைரஸ் சமூகத்தில் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன பொது முடக்கம், சுற்றுலாத்துறை வீழ்ச்சி, வணிகத்துறையில் பின்னடைவு உள்ளிட்ட காரணங்களால் பலர் தொழில் வாய்ப்புகளை இழந்துள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 2020 முதல் வலி சுமந்த வாழ்க்கையையே எமது நாட்டு மக்கள் வாழ்ந்துவருகின்றனர். 2021 இலாவது வழி பிறக்கும் என நம்பினோம். அது நடக்கவில்லை. நெருக்கடிகள் உச்சம் பெற்றுள்ளன.

அதேபோல நெருக்கடியான சூழ்நிலைகளில்கூட எமது பெருந்தோட்ட மக்கள் தொழிலுக்கு சென்றனர். பொருளாதாரம் பூஜ்ஜிய நிலைக்கு வராமல் இருப்பதற்கு பங்களிப்பு செய்தனர். அந்நிய செலாவணிகூட அவர்களால்தான் ஓரளவு வந்தது. ஆனால் அம்மக்களுக்கு 1000 ரூபா சம்பளம் என்பது முறையாக கிடைக்கவில்லை. எல்லா வழிகளிலும் அவர்கள் தோட்ட நிர்வாகங்களால் வஞ்சிக்கப்பட்டனர். பழிவாங்கப்பட்டனர். எனவே, 2022 ஆவது அந்த மக்களுக்கு விடிவைத் தரவேண்டும். தொழில் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். புலம் பெயர் தொழிலாளர்களின் நலன்கள் குறித்தும் முழுமையாக கவனம் செலுத்தப்பட வேண்டும். அவர்களுக்கும் கடந்தாண்டு வலிகளையே அள்ளி வழங்கியது.

அதேவேளை, கொரோனாமீது மட்டும் பழிசுமத்திவிட்டு அரசு மௌனம் காக்க முடியாது. தனது தவறான கொள்கைகளும் நெருக்கடி நிலைக்கு காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். கடந்தகால தவறுகளை திருத்திக்கொண்டு, எதிரணிகளின் ஆலோசனைகளையும் உள்வாங்கி புதியதொரு பயணத்தை – அதாவது மக்களுக்கான பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.

மக்களும் முழுமையாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றவும். தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவும். 2022 ஆம் ஆண்டிலிருந்தாவது மீளெழுச்சி பெறுவதற்கான பயணத்தை ஆரம்பிப்போம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.” – என்றுள்ளது.

Related Articles

Latest Articles