மலையக தொழிற்சங்க வரலாற்றில் புகழோடு பணியாற்றிய அமரர் அருள்சாமியின் மூன்றாம் ஆண்டு சிரார்த்த தினம் (06.01.2022) இன்றாகும். தனது சமூகத்துக்கு எத்தனை பெரிய துன்பங்கள், துயரங்கள், எதிர்ப்புகள் வந்தாலும் அவற்றை அமைதி வழியில் நின்று போராடி வெற்றி கொள்ள முடியும் என்பதை நிரூபித்தவர் அமரர் அருள்சாமி.
43 ஆண்டுகள் அரசியல், தொழிற்சங்க பணியாற்றி வந்த அருள்சாமி அமரர் தொண்டமானின் அரசியல் பாசறையில் வளர்ந்தவர். 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நுவரெலியா – மஸ்கெலியா தொகுதியில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் போட்டியிட்ட வேளையில், அவரது வெற்றியை உறுதி செய்ய காரணமாக இருந்தவர் அருள்சாமி. சமுதாயம் மீது அவர் அக்கறையுள்ளவர். மற்றையோரை மதிக்கும் உயரிய பண்பு அவரிடம்இருந்தது.
மும்மொழியிலும் சரளமாகப் பேசக் கூடிய புலமையைப் பெற்றிருந்தவர் அவர். தொழிற்சங்கப் போராட்டங்களில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து சேவையாற்றிய செயல் வீரர்.
மத்திய மாகாணத்தில் 1988 ஆம் ஆண்டு முதலாவது மாகாணசபையில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அடுத்து வந்த மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன், மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டவர். இக்காலகட்டத்தில் மலையக பாடசாலை அபிவிருத்தியிலும் மாணவர் முன்னேற்றத்திலும் முன்னிறு உழைத்தவர் என்ற பெருமை அருள்சாமியை சாரும்.
நீண்ட கால தொழிற்சங்க அனுபவமும் நிர்வாகத்திறனும் வாய்ந்தவர். மலையக தொழிற்சங்க வரலாறு பற்றி பேசும் போது அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானுடன் தோளோடு தோள் நின்று செயற்பட்டவர்களில் அமரர் அருள்சாமி முக்கியமானவர். அவர் இ.தொ.காவில் உதவி மாவட்ட பிரதிநிதியாக, மாவட்ட பிரதிநிதியாக, தொழிலுறவு அதிகாரியாக, பிராந்திய இயக்குனராக, உபதலைவராக பல வருடங்கள் பணியாற்றியவர். அக்காலங்களில் தொழிற்சங்க பிணக்குகளையும் பிரச்சினைகளையும் அவர் கையாண்ட விதம் இ.தொ.காவுக்கு பெருமை சேர்த்ததாகவே விளங்கியது.
தனது 16வது வயதில் இ.தொ.காவில் இணைந்து கொண்ட அவர், அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையிலான தொழிற்சங்கத்தில் பயணத்தை ஆரம்பித்தார். அரசியல், தொழிற்சங்கம் ஆகிய இரண்டு துறைகளிலும் பிரகாசித்த அமரர் அருள்சாமி 80களில் சர்வதேச மகாநாடுகளிலும் கலந்து கொண்டு பல்வேறு விடயங்களை சாதித்து காட்டினார்.
நிதானம், அமைதி, ஆழமான சிந்தனை உணர்வு கொண்டவர். அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் கருத்துணர்ந்து எதனையுமே ஆக்கபூர்வமாக கையாள்வதில் சமர்த்தராக விளங்கினார். தொழிலாளர்கள் மற்றும் பெருந்தோட்ட சேவையாளர்களுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தியவாறு அவர்களின் நம்பிக்கைக்குரியவராக செயற்பட்டார்.
தேசிய அரசியலில் பிரகாசித்த அவர் பேச்சாளர், செயல்வீரர் என போற்றப்பட்டவர். மத்திய மாகாணசபை உறுப்பினராகவும், அதன் பின்னர் தமிழ்க் கல்வி அமைச்சராகவும் இருந்ததுடன் பல்வேறு சமூக அமைப்புகளோடும் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.
தமிழ்க் கல்வி அமைச்சராக மத்திய மாகாணத்தில் இருந்த பொழுது மலையக கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்தினார். அமரர் ஆறுமுகன் தொண்டமானோடு இணைந்து 3179 ஆசிரியர் நியமனங்களை பெற்றுக் கொடுப்பதற்கு பாடுபட்டார். இரு தடவை மத்திய மாகாண தமிழ் சாஹித்திய விழாக்களை நடத்தி கலைஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் பெருமை சேர்த்தவர் அருள்சாமி. பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர்சபை பணிப்பாளராகவும் தலைவராகவும் பணியாற்றிய அவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜனாதிபதியின் கூட்டிணைப்பு பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இ.தொ.கா. நடத்திய தொழிற்சங்கப் போராட்டங்களில் அவரது பங்களிப்பு பாரியது. அவரே பல போராட்டங்களை நெறிப்படுத்தியிருந்தார். அவரது பேச்சு தொழிலாளர்களை உற்சாகப்படுத்தியது. சுமார் 50 ஆண்டு காலம் அமரர் தொண்டமானோடு பயணித்த அவர், நம்பிக்கைக்கும் விசுவாசத்திற்கும் பாத்திரமாகவும் செயற்பட்ட அவர், தனது 59வது வயதில் காலமானார்.
மலையக மக்களின் சமூக அரசியல் துறைகளில் மாற்றம் ஏற்பட்டு வரும் இக்காலகட்டத்தில், அவரது இழப்பு மலையக சமூகத்திற்கு மட்டுமின்றி, கிராமப்புற மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.










