எரிபொருட்களை கொள்வனவு செய்வதற்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை புதிய கடன் உதவியாக இந்தியா வழங்கியுள்ளது இந்த தகவலை இலங்கைக்கான இந்திய தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளது

இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்க்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் வெளியுறவு அமைச்சர் கலாநிதி.எஸ்.ஜெய்சங்கர் இந்த முக்கிய ஆதரவு குறித்து அறிவித்துள்ளார்.
2022 ஜனவரி 15 ஆம் திகதி வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவும் மெய்நிகர் மார்க்கமூடாக பரந்த கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்ததுடன் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான திடமான பொருளாதார பங்குடைமையின் பல்வேறு அம்சங்கள் குறித்தும் ஆராய்ந்திருந்தமையை இச்சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்ளமுடியும். நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ 2021 டிசம்பர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது பொருளாதார ஒத்துழைப்பிற்கான நான்கு முக்கிய தூண்களாக அடையாளம் காணப்பட்டவற்றில் ஒன்றை உணர்ந்துகொள்வதற்கு இந்த கடனுதவித்திட்டத்தை முற்கூட்டியே நடைமுறைப்படுத்துவது ஆதரவாக அமையும்.
அண்மையில் வெளிநாட்டு பரிமாற்ற ஆதரவாக 900 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையினை இந்தியா இலங்கைக்கு வழங்கியிருந்தது. இலங்கையுடன் எப்பொழுதும் இணைந்திருக்கவும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கவும் அத்துடன் இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக பங்குடைமைக்கான சிறந்த உத்வேகத்தை வழங்கவும் இந்தியா கொண்டிருக்கும் உறுதிப்பாட்டுடன் இணைந்தவையாக இந்த செயற்பாடுகள் அமைந்துள்ளன.
