இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட நிகழ்வுகள் (படங்கள்)

இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினம் இன்று (26) இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் கொழும்பில் கொண்டாடப்பட்டது. கொவிட்-19 சுகாதார நெறிமுறைகளை மிகவும் இறுக்கமாக கடைப்பிடித்த நிலையில் உயர் ஸ்தானிகராலயத்தால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள பல்வேறு நிகழ்வுகள் மற்றும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

உயிர் தியாகம்செய்த இந்திய அமைதிகாக்கும் படையினருக்கு இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்திய பின்னர் இந்திய உயர் ஸ்தானிகரின் வாசஸ்தலமான இந்திய இல்லத்தில் உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையையும் பார்வையிட்டார். இந்திய ஜனாதிபதியின் செய்தியின் முக்கிய குறிப்புக்களும் உயர் ஸ்தானிகர் அவர்களால் இச்சந்தர்ப்பத்தில் வாசிக்கப்பட்டது. மேலும், வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரின் விசேட வீடியோ செய்தி ஒன்றும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த சபையோர் மத்தியில் திரையிடப்பட்டது. தொடர்ந்து, இலங்கை கடற்படையினரின் இசை குழுவினரால் பாடல்கள் இசைக்கப்பட்டதுடன் உயர் ஸ்தானிகராலயத்தின் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் ஒழுங்கமைத்திருந்த கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றிருந்தன.

கிட்டத்தட்ட 10 இந்திய மாணவர்கள் கல்வி கற்றுவரும் இரத்மலானை பரம தம்ம சைத்திய பிரிவேனாவில் நடைபெறவிருக்கும் குடியரசு தின நிகழ்வுகளிலும் இந்நாளில் உயர் ஸ்தானிகர் கலந்துகொள்ளவுள்ளார். அந்நிகழ்வுகளின்போது புத்த பெருமானின் அருளாசிகளைப் பெற்றுக் கொள்வதற்காக சங்கைக்குரிய மகா சங்கத்தினரால் விசேட பிரார்த்தனைகளும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles