மொட்டு கூட்டணிக்குள் மோதல் ஆரம்பம்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலருக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களுக்குமிடையில் கடும் சொற்போர் மூண்டுள்ளது. இதனால் இரு தரப்பினருமே பொதுவெளியில் சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்துவருகின்றனர்.

2020 ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து மொட்டு சின்னத்தில் போட்டியிடும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, சில மாவட்டங்களில் தனித்து களமிறங்கியுள்ளது.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நம்பவே முடியாது என்றும் அவருடன் தொடர்பை வைத்துள்ள உறுப்பினர்களுக்குகூட மொட்டுகட்சி ஆதரவாளர்கள் வாக்களிக்ககூடாது என்றும் பிரசன்ன ரணதுங்க தொடர்ச்சியாக கருத்து வெளியிட்டுவருகிறார்.

அத்துடன், மொட்டு கட்சியின் பொலன்னறுவை மாவட்ட வேட்பாளர் ரொஷான் ரனசிங்க, அநுராதபுரம் மாவட்ட வேட்பாளர் எஸ்.எம். சந்திரசேன, களுத்துறை மாவட்ட வேட்பாளர் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்களை கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.

” ஜனாதிபதி தேர்தலின்போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே அவர்கள் எம்முடன் இணைந்து போட்டியிடுகின்றனர். ஆனால், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கே மக்கள் பேராதரவை வழங்கவேண்டும்.” – எனவும் குறிப்பிடுகின்றனர்.

பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் இவ்வாறான கருத்துகளால் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். சு.கவின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, உப தலைவர் மஹிந்த அமரவீர, தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

அரசாங்கத்துக்கு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவை இல்லாது செய்யும் நோக்கிலேயே இவர்களின் கருத்துகள் அமைந்துள்ளன. ஐ.தே.கவின் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் வகையிலேயே அவர்களின் கருத்துகள் அமைந்துள்ளன எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related Articles

Latest Articles