ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 49வது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகிறது.
இலங்கை தொடர்பான விவாதம் எதிர்வரும் 3ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன் அன்றைய தினம் மனித உரிமை ஆணையாளரினால் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கைக்கு பதிலளிப்பதற்கு அரசு தயார் நிலையில் உள்ளது.
ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இலங்கையின் சார்பில் ஜெனீவா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர்ஜீ. எல். பீரிஸ், நீதியமைச்சர் அலி சப்ரி ஆகியோர் அது தொடர்பில் தெரிவிக்கையில்:
” ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் அறிக்கைக்கு உரிய பதில் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கும் இலங்கையின் நிலைப்பாட்டினை ஆணித்தரமாக முன்வைப்பதற்கும் தயார் நிலையில் உள்ளோம்.” – என்றனர்.
அதேவேளை, இலங்கையிலிருந்து சென்றுள்ள இராஜதந்திர தூதுக்குழுவினருக்கு ஐ.நா மனித உரிமைப் பேரவையின் சவால்களை எதிர்கொள்ள தேவையான ஆலோசனைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 49வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் அதன் அமர்வுகள் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளன.