எழில் கொஞ்சும் மலைநாட்டின் நுவரெலியாவே குட்டி லண்டன் என அழைக்கப்படுகின்றது. இங்கு அனைத்து காட்சிகளும் ரம்மியமாக காணப்பட்டபோதிலும் நகரத்தின் மத்தியில் காணப்படும் குதிரை பந்தய திடலில் வாழ்ந்து வரும் மக்கள், அடிப்படை வசதிகள் இன்றி தொடர்ந்து 4 தலைமுறைகளாக 150 வருடங்களுக்கு ‘வலி சுமந்த வாழ்க்கை’ வாழ்ந்து வருகின்றனர்.
தற்போதும் 55 தற்காலிக வீடுகளில் சிறுவர்கள் , முதியோர்கள் உட்பட 300 பேர் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
ஆங்கிலேயர் காலத்திலேயே இக்குதிரைப் பந்தய திடல் அமைக்கப்பட்டுள்ளது. அப்போது அங்கு வேலை செய்வதற்கும்,குதிரைகளைப் பராமறிப்பதற்கும் இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். இதன் நிர்வாகம் ஆங்கிலேயரினாலும் பின்னர் நுவரெலியா நகர சபையும் 2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் விiயாட்டுத்துறை அமைச்சும் நடாத்தி வருகின்றது.
இந்த காலப்பகுதியில் அங்குவாழும் மக்களின் அடிப்படை தேவைகளை எவரும் பூர்த்தி செய்யாத நிலையில் பல்வேறுப்பட்ட பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். தற்போதும் தற்காலிக இறப்பர் சீட் மூலம் வேயப்பட்ட வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். குடிப்பதற்கு முறையான நீர்¸ மலசலகூடம்¸ மின்சாரம்¸ போக்குவரத்து¸ சுகாதாரம்¸ சிறுவர் பாரமரிப்பு¸ மற்றும் வசதிகள் இன்றியும் பல சமூகப்பிரச்சனைகளுக்கும் முகம் கொடுத்துள்ளனர்.
இப்பகுதியை மறுசீரமைப்பதற்கு வியாட்டுத்துறை அமைச்சு அனுமதி வழங்க மறுக்கின்றது. இதனால் தமது வீடுகளைக்கூட புனரமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். மழைக் காலங்களில் வெள்ளநீரால் நிர்க்கதியாகின்றனர்.எனவே, சுதந்திரமாகவும், சுகாதாரமாகவும் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிதருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோருகின்றனர்.
அதேவேளை இது தொடர்பில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கலாநிதி வே. இராதாகிருஸ்ணன் கவனத்திற்கும் மக்கள் அப்போது கொண்டு சென்றிருந்தனர். அதன்பயனாக விளையாட்டுதுறை அமைச்சின் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேச்சுவார்ததை நடாத்தி வேறு இடத்தில் 46 புதிய வீடுகளை நிர்மாணிக்க தீர்மானம் எடுக்கப்பட்டது. எனினும், அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
எனவே, இனியாவது அங்குவாழும் மக்களுக்கு சுதந்திரமாகவும், சுகாதாரமாகவும் வாழும் சூழ்நிலையை அரசியல்வாதிகள் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும். புதிய ஆட்சிலாவது அம்மக்களுக்கு விடிவு பிறக்கட்டும்.
மக்கள் செய்தியாளர் – பா.திருஞானம்