சர்வக்கட்சி மாநாட்டில் எதிர்க்கட்சிகள் பங்கேற்காமை தவறான முடிவாகும். அரசியல் இலாபத்துக்காகவே அந்தக்கட்சியின் இந்த முடிவை எடுத்திருக்கக்கூடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
” அரசமைப்பின் பிரகாரம் தற்போது ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியாது. இந்த விடயம்கூட சஜித் பிரேமதாசவுக்கு தெரியவில்லை.’ – எனவும் சுமந்திரன் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
” சர்வக்கட்சி மாநாட்டின்போது புலம்பெயர் தமிழர்களின் முதலீடு தொடர்பில் பல தரப்பினரும் கருத்துகளை முன்வைத்தனர். நாமும் அது தொடர்பில் கதைத்தோம். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படுமானால் புலம்பெயர் தமிழர்கள் நிச்சயம் உதவுவார்கள் சுட்டிக்காட்டினேன். புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொடுப்பதற்கான பாலமாக இருப்பதற்கு நாம் தயார்.
இலங்கையின் பொருளாதாரத்தைவிடவும் புலம்பெயர் தமிழர்களின் பண பலம் உள்ளது. எனவே, அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி அதற்கு அப்பாலான அரசியல் தீர்வொன்று வழங்கப்படுமானால் நிச்சயம் உதவி கிட்டும். ஆனால் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வே அவசியம். மாறாக ஆளுநர் வசம் அதிகாரங்கள் இருக்கக்கூடாது. மக்களால் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகள் வசமே அதிகாரம் இருக்க வேண்டும்.
ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது நாம் அரசியல் தீர்வு பற்றியே பேச்சு நடத்துவோம்.” – என்றார்.
