பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மார்ச் மாதம் முதல் குறைந்தபட்ச நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைப்பதை தோட்டக் கம்பனிகள் உறுதிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவிப்பு விடுத்திருந்தாலும் 5 மாதங்கள் கடந்தும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.
ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் கம்பனிகளின் பிரதிநிதிகளுக்கிடையில் பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால் இன்னமும் தீர்வு என்பது இழுபறி நிலையிலேயே இருக்கின்றது.
பெருந்தோட்டக் கம்பனிகள் ஆயிரம் ரூபாவை வழங்க தயாராக இருக்கின்றபோதிலும் மேலதிகமாக இரண்டு கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என நிபந்தனை விதிப்பதாகவும், இதனை ஏற்கமுடியாது எனவும் தொழிற்சங்கங்கள் தேர்தலுக்கு முன்னர் அறிவித்தன.
தற்போது தேர்தல் முடிவடைந்துவிட்டது, ஆனால் ஆயிரம் ரூபா தொடர்பான பேச்சுவார்த்தை இன்னும் ஆரம்பமாகவில்லை. இதனால் தொழிலாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
இழுத்தடிப்புகள் இன்றி முறையாக இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருக்கும்பட்சத்தில் இந்நேரம் நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைத்திருக்ககூடும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.