மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியில், “தமிழை” இல்லாமற் செய்து, புதிய பெயரைச் சூட்டுவதற்கு, ஆராயப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்று ‘தமிழ்மிரர்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி ஆகியன இணைந்தே, தமிழ் முற்போக்குக் கூட்டணி
உருவாக்கப்பட்டது.
அக்கூட்டணி கடந்த பொதுத்தேர்தலில் கொழும்பு, நுவரெலியா, பதுளை, கண்டி, கம்பஹா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் போட்டியிட்டு, ஆறு ஆசனங்களைத் தனதாக்கிக்கொண்டது.
இந்நிலையில், அக்கூட்டணியை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கான முயற்சிகளை, கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் முன்னெடுத்துள்ளார்.
இந்நிலையில், தமிழ் முற்போக்குக் கூட்டணியில், ஓர் இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் “தமிழ்” இருப்பதனால், கூட்டணியின்
பெயரிலிருந்து தமிழை அகற்றிவிட்டு, புதிய பெயரை வைப்பதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓர் இனத்தை அல்லது ஒரு மதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெயர்களைக்
கொண்டிருக்கும் கட்சிகளைப் பதிவு செய்வதில் சிக்கல்கள் ஏற்படும்.
அதனை கருத்திற்கொண்டே, “தமிழை” இல்லாமல் செய்து, புதிய கட்சியொன்றைப் பதிவதற்கு, கூட்டணி ஆலோசித்து வருவதாக அறியமுடிகின்றது. .