கேம்பிரியில் தங்க நகைகள் கொள்ளை! அச்சத்தில் மக்கள்!!

(ஆர்கே.கவிஷான்)

லிந்துலை, கேம்பிரி மேற்பிரிவில் இன்று (2022.04.13) கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

வீட்டார் உறக்கத்தில் இருந்த சமயம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அதிகாலை 02.50 மணியளவில் வீட்டுக்குள் புகுந்து பெறுமதியான நகைகள் மற்றும் பணப்பைகளை களவாடிச் சென்றுள்ளார்.

அண்மைக்காலமாக லிந்துலை, தலவாக்கலை போன்ற பிரதேசங்களை அண்டிய தோட்டங்களில் திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனால் மக்கள் அச்சத்தில் காணப்படுகின்றனர்.

குறித்த வீட்டிலிருந்து பெறப்பட்ட பணப்பைகளில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு, பையை வீட்டின் பின்புறத்தில் வீசியுள்ளதோடு பெறுமதியான தங்க நகைகளையும் களவாடி சென்றிருக்கிறார்.

சம்பவம் இடம்பெற்ற சில மணி நேரங்களில் லிந்துலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபராக கருதப்படும் மூன்றாம் தரப்பினரின் தொலைபேசி சம்பவ இடத்தில் தவறவிடப்பட்டதையடுத்து இவர் கைதாகியுள்ளார்.

மேலும் நாட்டின் அசாதாரண சூழ்நிலையை கவனத்தில் கொண்டு மக்கள் செயற்பட வேண்டுமென்றும், தங்க நகைகளை அணிந்து செல்லும்போது பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் அவதானத்தோடு செயற்படுமாறும் லிந்துலை பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles