தனிநபர் பிரேரணையை விட அமைச்சரவை ஊடாக மேற்கொள்வதே 21 ஆவது திருத்தத்தை முன்னெடுப்பதற்கான துரிதமான வழியென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உடனடியாக மேற்கொள்ள வேண்டிய விடயம் என்ற போதும் அரசியலமைப்பை மீறக்கூடிய எதனையும் தனக்கு மேற்கொள்ள முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் அனுப்பியுள்ள கடிதத்திற்கு பதில் அனுப்பியுள்ள அவர்,
21 ஆவது திருத்த யோசனை தொடர்பில் நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது. நாட்டுமக்களின் பிரதான கோரிக்கையான அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி, அரசாங்கம் மற்றும் விஜேதாஸ ராஜபக்ஷ உள்ளிட்ட 40 எம்.பிகள் முன்வைத்த யோசனை தொடர்பில் கட்சித் தலைவர் கூட்டத்தில் ஆராயப்பட்டதுடன் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் சட்டமா அதிபர் உள்ளிட்ட நீதிபதிகள் குழுவும் பங்கேற்றது. என்னிடம் கையளிக்கப்பட்ட 21 ஆவது திருத்த யோசனையை அதே தினம் பிரதமருக்கும் அமைச்சரவை செயலாளருக்கும் சட்டமா அதிபருக்கும் அனுப்பிவைத்தேன். குறித்த யோசனை நேற்று (25) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்பட இருந்ததாக அறிந்தேன்.
அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய அதனை சட்டமா அதிபருக்கு முன்வைப்பது அமைச்சரவை செயலாளரின் பொறுப்பாகும். தற்பொழுது அமுலிலுள்ள நாட்டின் சட்டத்திற்கு அமைய இந்த நடைமுறை தான் வேகமாக மேற்கொள்ளக் கூடிய முன்னெடுப்பாகும்.
தனிநபர் பிரேரணையாக முன்வைக்கும் செயற்பாடு காலம் பிடிக்கும் என்றும் சபாநாயகர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உடனடியாக மேற்கொள்ள வேண்டிய விடயம் என்ற போதும் அரசியலமைப்பை மீறக்கூடிய எதனையும் எனக்கு மேற்கொள்ள முடியாது.
ஏப்ரல் 28 ஆம் திகதி மற்றொரு கட்சித் தலைவர் கூட்டம் நடைபெற உள்ளது என்பதையும் நினைவுபடுத்துகிறேன் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.