” நாடாளுமன்றத்தில் இணக்கப்பாடு இருந்தால், ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி தயாராகவே இருக்கின்றார். எனவே, எதிரணி சாதாரண பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை பொறுப்பேற்கலாம்.”
இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நாலக கொடஹேவா தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,
” சர்வக்கட்சி இடைக்கால அரசை ஏற்படுத்துவதற்கு தான் தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மகாநாயக்க தேரர்களுக்கு எழுதிய கடிதத்திலும் அவர் அவ்விடயத்தை எடுத்துரைத்திருந்தார். ஆட்சி மாற்றத்துக்கு அவர் தடையாக இருக்கவில்லை. அரச தலைவராக நம்பகத்தன்மையுடன் செயற்பட்டுவருகின்றார்.
நாடாளுமன்றத்தில் இணக்கப்பாடு இருந்தால், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம். இது பற்றி ஜனாதிபதி எனக்கும் தனிப்பட்ட ரீதியில் தெரியப்படுத்தியுள்ளார்.
பிரச்சினைக்கு அரசியலமைப்பு ரீதியில்தான் தீர்வு காணவேண்டும். இடைக்கால சர்வக்கட்சி அரசுக்கு ஜனாதிபதி ஏற்கனவே அழைப்பு விடுத்தார். எதிர்க்கட்சிகள் முன்வரவில்லை. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால், ஆட்சி மாற்றத்துக்கு ஜனாதிபதி எதிராக இருக்கமாட்டார்.” – என்றார்.