மொட்டு கட்சியும், சுயாதீன அணிகளும் சங்கமம் – பிரதி சபாநாயகரானார் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

நாடாளுமன்றத்தில் இன்று (05) நடைபெற்ற பிரதி சபாநாயருக்கான தேர்வில், சுயாதீன அணிகளின் சார்பில் களமிறக்கப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய வெற்றிபெற்று, பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக 148 வாக்குகள் அளிக்கப்பட்டன.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் களமிறங்கிய இம்தியாஸ் பாக்கீர் மாக்காருக்கு ஆதரவாக வாக்குகள் 65 வழங்கப்பட்டன. 3 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

நாடாளுமன்றம் இன்று (05.05.2022 ) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

சபாநாயகர் அறிவிப்பு, அமைச்சுகளின் அறிக்கைகள் முன்வைப்பு, பொது மனுதாக்கல், 27/2 இன்கீழான எதிர்க்கட்சித் தலைவரின் விசேட அறிவிப்பு, அதற்கு நிதி அமைச்சரின் பதில் ஆகியன முடிவடைந்த பின்னர் முற்பகல் 10.45 மணியளவில் பிரதி சபாநாயகர் பதவிக்கான தேர்வு இடம்பெற வேண்டும் என்ற அறிவிப்பை சபாநாயகர் விடுத்தார்.

இதன்போது, பிரதி சபாநாயகர் பதவிக்காக – நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் சார்பில், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் எம்.பியும், முன்னாள் பிரதி சபாநாயகருமான ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் பெயர் முன்மொழியப்பட்டது.

சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபாலடி சில்வாவால், ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் பெயர் முன்மொழியப்பட்டது. அதனை சுசில் பிரேமஜயந்த எம்.பி., வழிமொழிந்தார்.

ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில், பிரதி சபாநாயகர் பதவிக்கு எவரும் போட்டியிடவில்லை. ஆளுங்கட்சி ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவை ஆதரிக்கும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சபையில் அறிவித்தார்.

இதனையடுத்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில், இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் பெயர், பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவால் முன்மொழியப்பட்டது. இதனை எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல வழிமொழிந்தார்.

பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதால், வாக்கெடுப்பை நடத்துவதற்காக ஐந்து நிமிடங்களுக்கு, சபாநாயகரால் அழைப்பு மணி ஒலிக்கவிடப்பட்டது. அதன்பின்னர் இரகசிய வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

“ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்கப்படும். அதில் தாம் விரும்பும் வேட்பாளரின் பெயரை சரியாக எழுத வேண்டும். தமது கையொப்பத்தையும் சரியாக இடவேண்டும். பெயர் சரியாக எழுதப்படாவிட்டாலோ அல்லது கையொப்பம் இடப்படாவிட்டாலோ வாக்குச்சீட்டு நிராகரிக்கப்படும்.” என சபாநாயகர், அனைத்து எம்.பிக்களும் தெரியப்படுத்தினார்.

அவ்வேளையில் “ எம்.பிக்கள் கையொப்பம் இடுவதாக இருந்தால், எப்படி இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும்.” என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினர்.

“ நாடாளுமன்ற நிலையியற் கட்டளையில் அப்படிதான் ஏற்பாடு உள்ளது, அதன் பிரகாரம்தான் தேர்வு நடத்தப்படும். எது எப்படி இருந்தாலும் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் .” என சபாநாயகர் திட்டவட்டமாக அறிவித்து, வாக்கெடுப்பை ஆரம்பிக்குமாறு ஆணையிட்டார். 2018 இலும் இப்படிதான் தேர்வு இடம்பெற்றது என ஆளுங்கட்சியினர், சபாநாயகரின் முடிவை ஆமோதித்தனர்.

இதனையடுத்து ஆளும் மற்றும் எதிரணியினருக்கு ‘வெத்து பெட்டி’ காண்பிக்கப்பட்டு , சபாபீடத்துக்கு முன்பாக வாக்குப் பெட்டி வைக்கப்பட்டது. ஒவ்வொரு எம்.பியின் பெயரும் , நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தால் அழைக்கப்பட, – சம்பந்தப்பட்டவர்கள் , வாக்களிப்புக்காக ஒதுக்கப்பட்ட இடத்துக்கு வந்து, வாக்குச்சீட்டில் தாம் ஆதரிக்கும் உறுப்பினரின் பெயரை எழுதி, கையொப்பம் இட்டு, வாக்குச்சீட்டை வாக்குப்பெட்டியில் இட்டனர்.

நண்பகல் 12. 28 மணியளவில் வாக்களிப்பு நிறைவுபெற்றது. சபாபீடத்தில் வைத்து , சபாநாயகர் முன்னிலையில், நாடாளுமன்ற செயலாளர், பிரதி செயலாளர்களின் பங்களிப்புடன் வாக்குகள் எண்ணப்பட்டன. பின்னர் ஒரு மணியளவில் தேர்தல் முடிவை சபாநாயகர், அறிவித்தார்.

இதன்படி சுயாதீன அணிகளின் சார்பில் களமிறங்கிய ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய 148 வாக்குகளையும், எதிரணி சார்பில் களமிறங்கிய இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் 65 வாக்குகளையும் பெற்றனர். அந்தவகையில் பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவுசெய்யப்பட்டார். இதற்கு முன்னரும் அவரே அப்பதவியை வகித்தார்.

அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், அஜித் ராஜபக்சவை, பிரதி சபாநாயகர் பதவிக்கு களமிறக்க ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னதாக திட்டமிட்டிருந்தது. எனினும், இன்று காலை நடைபெற்ற நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் அம்முடிவு திடீரென மாற்றப்பட்டது. பிரதி சபாநாயகருக்கான தேர்வில் தோல்வி ஏற்பட்டால், அது அரசுக்கு மேலும் பின்னடைவாக அமையும் என்பதாலும், சுயாதீன அணிகளுக்கு நேசக்கரம் நீட்டும் வகையிலும் மொட்டு கட்சி தந்திரோபாக பின்வாங்கலை மேற்கொண்டது.

அதேவேளை, வாக்களிப்பின்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தான் யாருக்கு வாக்களித்தார் என்பதை காண்பிக்கும் வகையில், வாக்கு சீட்டை எதிரணி பக்கம் சிறிது நேரம் காண்பித்தார். பிரதமருக்கும் அந்த வாக்குச்சீட்டை காண்பித்தார். எதிர்க்கட்சித் தலைவரின் இந்த செயலை சபாநாயகர் கண்டித்தார். ‘இரகசிய தன்மை’ குறித்து பேசிவிட்டு, இவ்வாறு செயற்படுவது ஏற்புடைய நடவடிக்கை அல்லவெனவும் சுட்டிக்காட்டினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. வாக்களிப்பு வேளையில் சபையில் பிரசன்னமாகி இருக்கவில்லை.

ஆர்.சனத்

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles