விவசாயத் திணைக்களத்தின் அனுமதி அல்லது சிபாரிசு இன்றி போலியான பூச்சிக்கொல்லி மற்றும் விவசாய இரசாயனப் பொருட்களை விற்பனை செய்த இருவரை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விவசாய திணைக்களத்தின் அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட போலியான பூச்சிக்கொல்லி இரசாயன மருந்துக்கள் மற்றும் விவசாய உப மருந்துக்களை நுவரெலியா நகரில் கண்டி வீதியோரத்தில் உள்ள நடைபாதையில் விற்பனை செய்யும் போது நுவரெலியா பொலிஸார் நேற்று முன் தினம் (14) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கைது செய்துள்ளனர்.
நுவரெலியா பிரதேச விவசாயிகளுக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் நுவரெலியா நகர மையத்தில் போலி பூச்சிக்கொல்லி மற்றும் விவசாய இரசாயண பொருட்களை விற்பனை செய்து வந்த சந்தேக நபர்கள் இருவரையும் போதைப்பொருளுடன் நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் இருவரும் நுவரெலியா கந்தப்பளை மற்றும் ராகலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், பதுளை ஹாலிஎல பிரதேசத்தை சேர்ந்த ஒருவராலேயே இந்த போலி விவசாய இரசாயண பொருட்களால் தயாரிக்கப் பட்டு நாட்டின் பல பாகங்களிலும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் விற்கும் பூச்சிக்கொல்லி மருந்துக்கள் மற்றும் வேளாமை இரசாயணபொருட்கள் தரமற்றவை என்றும் பணம் சம்பாதிப்பதற்காகவே இது செய்யப்படுவதாகவும் போலிசார் சந்தேகிக்கின்றனர்.
கைப்பற்றப்பட்ட திரவமானது விவசாயத் திணைக்களம் அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வேறு எந்த நிறுவனத்தினாலும் பதிவு செய்யப்படவில்லை அல்லது பரிந்துரைக்கப்படவில்லை என்று விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்டவர்ளை கைது செய்யப்பட்ட போது அவர்களிடம் இருந்த சுமார் 100 போத்தல்கள் விவசாய இரசாயன திரவம், காட்சிப் பலகை மற்றும் பொருள்களை விற்கப் பயன்படுத்திய காட்சி மேசை ஆகியவற்றைக் கைப்பற்றிய போலிஸார், இரு சந்தேக நபர்களையும் பிணையில் கையெழுத்திட்டுவிடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நுவரெலியா விவசாய திணைக்களத்தின் உதவியுடன் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் நுகர்வோர் அதிகாரசபையின் அறிக்கையைப் பெற்றதன் பின்னர் நாளை 17ஆம் திகதி செவ்வாய்கிழமை ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
