‘ஜனாதிபதியை தமிழ் மக்கள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள்’

” இந்த நாட்டில் வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு விசேட உரிமைகள் எதுவும் கிடையாது. இலங்கையானது பிளவுபடாத – பிரிக்கமுடியாது நாடு என்ற கருத்தாடலையும் அவர்கள் மத்தியில் உருவாக்கவேண்டும்.” – என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையாக வாழும் தமிழ் மக்களின் ஆதரவை ராஜபக்ச அரசாங்கத்தால் ஏன் இன்னும் வெல்லமுடியாதுள்ளது என எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” வடக்கு, கிழக்கில் தமக்கு சுயநிர்ணய உரிமை இருப்பதாக தமிழ் மக்கள் நம்புகின்றனர். இதனை அடிப்படையாகக்கொண்டு போராட்டம் இடம்பெற்றது. இதன்போது பிரதான கட்சிகள் மக்களை ஏமாற்றினவேதவிர, நேரடி பதில்கள் எதனையும் வழங்கவில்லை.

சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இந்நாட்டில் சம உரிமைகள் இருக்கின்றன என்பதை நாம் சுட்டிக்காட்டியுள்ளோம். எனவே, வடக்கு, கிழக்கு மக்களுக்கு அப்பகுதியில் விசேட உரிமையுள்ளது என்ற காரணியை ஏற்கமுடியாது. இதனை சுட்டிக்காட்டுவதால் எமது கட்சிமீது மக்கள் அதிருப்தியடைகின்றனர். இருப்பதை நாம் தடுப்பதுபோல் உணர்கின்றனர்.

தமிழ் மக்களுக்கு பிரபாகரன் கொடுமைகளை இழைத்திருந்தாலும் சிலர் மத்தியில் அவருக்கு ஆதரவு இருக்கின்றது என்பதையும் நாம் ஏற்கவேண்டும். போர் முடிவடைந்த பின்னர் அது இல்லாமல்போய்விட்டது. இதனால் கவலையில் இருக்கும் சிலரும் இருக்கவே செய்கின்றனர்.

எமது அரசாங்கத்தால் 2010- 2015 காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சமூக அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு பாரிய திட்டங்ளை முன்னெடுத்திருந்தாலும் சில அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் தவறான கண்ணோட்டத்தையே ஏற்படுத்தினர். அரசாங்கத்துக்கு எதிரான கருத்தை கட்டியெழுப்பினர். 2019வரையிலும் இந்நிலைமை நீடித்தது.

சிங்களம், தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களையும் சமமாக வழிநடத்தும் தலைவரே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச என்பதை வடக்கு, கிழக்கு மக்கள் புரிந்துகொள்வதற்கு இன்னும் சில காலம் எடுக்கும். அதற்கான அவகாசத்தை நாம் வழங்கவேண்டும். அதேபோல் இலங்கையானது பிளவுபடாத – பிரிக்கமுடியாத நாடு என்பதையும் சுட்டிக்காட்டவேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles