இலங்கை பொருளாதார சிக்கலில் உள்ளநிலையில் இந்திய தமிழ்நாட்டு அரசு இலங்கை மக்களுக்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.
இவ்வாறு இந்திய தமிழ்நாட்டு அரசு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு பொருட்களை பிரித்து வழங்க தற்போது நாடளாவிய ரீதியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மலையகத்தில் பொருந்தோட்ட மக்களுக்கும் இந்த அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் நுவரெலியா மாவட்ட மக்களுக்கு தமிழ்நாட்டு அரசு வழங்கியுள்ள அத்தியாவசிய உணவு பொருட்களை தோட்ட தொழிலாளர்கள் மக்களுக்கு வழங்கி வைக்க சனிக்கிழமை (28) நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தோட்டத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு பாகுபாடின்றி வழங்கிவைக்கப்படவுள்ள உணவு பொருட்கள் நுவரெலியா மாவட்ட செயலாளரிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ள உணவு பொருட்கள் அடங்கிய பொதியினை அவ்வப்பகுதி கிராமசேவர்கள் ஊடாக தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு வழங்க பிரதேச செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த வகையில் இந்த உணவு பொருட்கள் அடங்கிய பொதி யார் யாரெல்லாம் பெற்றுக்கொள்ள முடியும் என்ற அறிவிப்பின் பிரகாரம் பொதிகளை பெற்றுக்கொள்ளக்கூடியவர்கள் தொடர்பான பெயர் விபரங்கள் கிராம சேவகர்கள் ஊடாக திரட்டப்பட்டுள்ளது.அதனடிப்படையில் முதலில் தோட்டங்டங்களில் தற்போது தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய உணவு பொதிகள் பாகுபாடின்றி வழங்கப்படுமென கிராம சேவை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் நுவரெலியா பிரதேச சபை தவிசாளரும்,இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப தலைவருமான வேலு யோகராஜியிடம் வினவப்பட்டது.
இதன்போது தோட்டத்தில் தொழில் புரியும் தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு இந்திய தமிழ்நாட்டு அரசாங்கம் வழங்கும் அத்தியாவசிய உணவு பொதிகள் கட்டாயமாக வழங்கப்படும் அதேநேரத்தில் செல்வந்தர்களாக வர்த்தகர்கள், வியாபாரிகள் மற்றும் அரசாங்க தொழில் செய்பவர்களுக்கு இந்த உணவு பொதிகள் வழங்கப்படாது என தெரிவித்தார்.
அந்த வகையில் வர்த்தகர்கள்,அரசாங்க தொழில் செய்பவர்களை தவிர ஏனையோர்களுக்கு கட்டாயமாக இந்த உணவு பொருட்கள் பொதிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
அத்துடன் கிராம சேவை அதிகாரிகள் ஊடாக தோட்ட பகுதிகளில் வழங்கப்படும் இந்த உணவு பொருட்கள் விணியோகத்திற்கு எந்தவொரு இடையூறும் விளைவிக்காது மக்கள் செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.










