மங்கிபொக்ஸ் (monkeypox) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற வைரஸின் பெயரை மாற்றுமாறு உலக சுகாதார நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“பாரபட்சம்” மற்றும் “இழிவுபடுத்தும்” விதமான பெயர் குறியீட்டை மாற்ற வேண்டியது அவசர தேவையாகும்
என்று ஆபிரிக்கா உட்பட சில நாடுகளைச் சேர்ந்த அறிவியலாளர் குழு ஒன்று உலக சுகாதார அமைப்பிடம் கேட்டுள்ளது.
குரங்கு வைரஸ் ஆபிரிக்காவில் இருந்து பரவுவதாக நோயுற்ற ஆபிரிக்கச் சிறுவர்களது படங்களுடன் உலகின் பிரதான ஊடகங்களில் செய்திகள்
பகிரப்படுவது பாரபட்சமானது, இழிவுபடுத்தும் விதமானது என்று ஆபிரிக்க நாட்டுத் தொற்று நோய் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதில் இனப் பாரபட்சமும் இருப்பது போலப்படுகிறது என்று ஆபிரிக்கத் தொற்று நோய் நிலையத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய தொற்று நோய் ஒன்றுக்கு புவியியல் ரீதியான அல்லது விலங்குகள், இனம், நாடு போன்ற அடையாளத்தைக் குறிக்கின்ற பெயர் இடப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்பதை சுகாதார அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
கொரோனா பெரும் தொற்றுநோய் ஆரம்பித்த சமயத்தில் அது சீன வைரஸ் என்றும் வுஹான் வைரஸ் என்றும் வெவ்வேறுவிதமான பெயர்களில் அழைக்கப்பட்டமை பலவித விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தியிருந்தன. அதன் பின்னர்
சுகாதார அமைப்பு அதற்கு “கோவிட் – 19” என்று அறிவியல் பெயரைச் சூட்டியது.
கொரோனா வைரஸின் திரிபுகளுக்குக் கிரேக்க இலக்கங்களைக் குறிக்கும் பெயர்கள் இடப்பட்டு வருகின்றன. பெரியம்மை குடும்பத்தைச் சேர்ந்த குரங்கு அம்மை அதற்கான தடுப்பூசி கண்டறியப்படுவதற்கு முன்பாக உலகில் பல லட்சம் பேரின் உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருந்தது. மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவின் பருவ மழைக் காடுகளில் எலிகள், மர அணில்கள் உட்பட பல விலங்குகளில் அந்த வைரஸ் காணப்பட்ட போதிலும் அதற்குக் குரங்கு அம்மை(monkeypox) என்ற பெயர் எவ்வாறு வந்தது?
1958 இல் இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவுவதற்கு முன்பாக டென்மார்க்கின் பரிசோதனைக் கூடங்களில் முதலில் குரங்குகளிலே கண்டறியப்பட்டது என்றும் அதன் காரணமாகவே அது குரங்கு வைரஸ் எனப் பெயர் பெற்றதுஎன்றும் சொல்லப்படுகிறது.
பொதுவாக மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்க நாடுகளில் மட்டுமே காணப்பட்ட குரங்கு அம்மை நோய் கடந்த மாதம் உலகின் பல நாடுகளிலும் கண்டறியப்பட்டது. இதுவரை உலகெங்கும் ஆயிரத்து 300 தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்று சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.