‘Global Organisation of People of Indian Origins’ என்ற அமைப்புடன் எவ்வித உறவுகளையும் பேணாதிருக்க தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,
இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களை உலகளவில் பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக்கொள்ளும், GOPIO என்ற (Global Organisation of People of Indian Origins) அமைப்பு நேற்று முதல் நாள் இரவு கொழும்பின் பிரபல ஐந்து நட்சத்திர விடுதியில், புதிய இந்திய தூதர் கோபால் பாக்லேவுக்கு வரவேற்பு நிகழ்வை நடத்தியது.
புதிய இந்திய தூதுவரை, தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்கனவே அதிகாரபூர்வமாக சந்தித்து உரையாடல்களை நடத்தியிருந்தாலும், சமூக நலனையும், பண்பாட்டு நாகரீத்தையும் கருதி,இந்த நிகழ்வு ஏற்பாட்டாளர்களின் அழைப்பை ஏற்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் எம்பீக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
எனினும் இந்நிகழ்வின் ஏற்பாட்டுக்குழுவில் இருக்கும் ஒருசில பெரிய மனிதர்களின் சிறிய மதி காரணமாக, தமிழ் முற்போக்கு கூட்டணி அவமானப்படுத்தபட்டுள்ளது.
கடைசியாக நடைபெற்ற தேர்தலில், 345,000 மொத்த வாக்குகளுடன் மீண்டும் ஆறு எம்பீக்களை பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்து, வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் மலையக மக்களின் மிகப்பெரிய அரசியல் இயக்கமாக பரிணமித்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு, உரிய அந்தஸ்த்தை தருவதற்கு, இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களை உலகளவில் பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக்கொள்ளும், GOPIO என்ற அமைப்புக்கு தெரியவில்லை.
ஆளும் தரப்பில் இருந்தாலும், எதிர்தரப்பில் இருந்தாலும், மிக அதிகமான மக்கள் பிரதிநிதிகளை கொண்ட அமைப்பை அங்கீகரிக்கும் சமூக நாகரீகம் இந்த அமைப்புக்கு புரியவில்லை.
தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு தரப்படும் மரியாதை, இந்த இயக்கத்துக்கு நுவரெலியா, கொழும்பு, கண்டி, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் இருந்து வாக்களித்த மக்களுக்கு தரப்படும் மரியாதை என்பதை இவர்கள் அறியவில்லை.
இந்த அமைப்பை தனது தனிபட்ட செல்வாக்குக்கு உள்ளாக்கி வைத்திருக்கும் ஒரு வயதான முன்னாள் எம்பி ஒருவர், தான் இப்போது இருக்கின்ற கட்சி விசுவாசத்தின் அடிப்படையில், தனது வங்குரோத்து அரசியல் காழ்ப்புணர்வின் காரணமாக, இந்த அமைப்பை பயன்படுத்தி, இந்த அமைப்பில் இருக்கும் ஏனையோரையும் தவறாக வழிநடத்தியுள்ளார் என நேற்று, பாராளுமன்ற வளாகத்தில் கூடிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் கருத்துகள் பரிமாறப்பட்டு கண்டறியப்பட்டது.
இனிவரும் எதிர்காலத்தில் GOPIO என்ற இந்த அமைப்புடன் எந்தவித உறவுகளையும் தமிழ் முற்போக்கு கூட்டணி பேணக்கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இது தொடர்பில் தமுகூ பாராளுமன்ற குழு கொறாடா அருண் அரவிந்தகுமார் எம்பி உரிய தரப்புகளுக்கு அதிகாரபூர்வமாக அறிவிப்பார்.