‘இ.தொ.கா.வும் முற்போக்கு முன்னணியும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக செயல்படுவது அவசியம்’

தமிழக அரசு இரண்டாம் கட்ட நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. அதன் விநியோகங்களும் பல்வேறு பிரதேசங்களில் இடம் பெற்று வருகின்றன. இதேவேளை நுவரெலியா, பதுளை மாவட்டங்களிலுள்ள சில தோட்டங்களில் இதுவரை நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படவில்லையென தெரியவருகின்றது. அதே வேளை பகிர்ந்தளிக்கப்பட்ட சில தோட்டங்களில் குடும்ப எண்ணிக்கைக்கு ஏற்ப விநியோகம் இடம்பெறவில்லை என்றும் கவலை தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான குளறுபடிகளுக்குக் காரணம் இருக்கவே செய்கின்றது. அநேகமாக தோட்ட குடியிருப்புகளில் இரண்டு மூன்று குடும்பங்கள் ஒன்றாகவே தங்கியிருக்கின்றன. எனினும் குடும்பத் தலைவர் என்ற ரீதியில் தந்தை அல்லது தாயின் பெயரிலேயே குடும்பப் பதிவுகள் இடம்பெறுகின்றன.

இதனால் திருமணம் முடித்து தனிவீட்டு வசதியின்றி ஒரே வீட்டில் குடியிருக்கும் மகன்மார், மகள்மார் குடும்பங்களின் பதிவுகள் தனியாக கையாளப்படுவதில்லை. கிராமப்புறங்களில் இவ்வாறான விபரங்கள் கிராம அதிகாரிகளுக்கூடாக விழிப்புணர்வு ஊட்டப்பட்டு கிரமமாக கையாளப்படுகின்றன. இதற்கு சமுர்த்தி உத்தியோகத்தர்களும் உதவியாக இருக்கின்றார்கள்.

ஆனால் பெருந்தோட்டப் பிரதேசங்களில் இவ்வாறான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு தோட்ட நிர்வாகங்களையே சார்ந்துள்ளது. இதற்காக குடும்பநல உத்தியோகத்தர் (WELFARE OFFICER) என்னும் பெயரில் சம்பளத்துக்கு ஒருவர் அமர்த்தப்படவே செய்கின்றார்.

பெருந்தோட்டங்களைப் பொறுத்தவரையில் இப்பதவிக்கு நியமிக்கப்பபடுபவர்களில் அநேகர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களே! இவர்களது செயற்பாடுகள் திருப்தியளிப்பதாக இல்லை. தவிர பிரதேசத்துக்கு பொறுப்பாகவுள்ள செயலக அதிகாரிகளோ கிராம அதிகாரிகளோ இதனைக் கண்டு கொள்வதுமில்லை.

அத்துடன் தோட்ட மக்களும் அக்கறை காட்டுவது இல்லை. இதன் காரணமாகவே நிவாரண விநியோகங்களில் குளறுபடிகள் நடக்கின்றன. ஓரே வீட்டில் இரண்டு மூன்று குடும்பங்கள் இருந்தாலும் நிவாரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள குடும்ப தலைவருக்கு மட்டுமே கிடைக்கக்கூடியதாக உள்ளது. தற்போது தமிழக அரசு அனுப்பி வைத்துள்ள நிவாரணப் பொருட்கள் விநியோகத்திலும் இதுவே நடந்து வருகின்றது.

உண்மையில் இது நிர்வாக ரீதியிலான சிக்கல். இனியாவது குறைந்த வருமானம் பெறுவோர் பட்டியலில் ஓரேவீட்டில் குடியிருந்தாலும் தனித்தனி குடும்பங்களாக தம்மை பதிவு செய்துகொள்ள தோட்ட மக்கள் கரிசனை காட்ட வேண்டும். இல்லாவிடில் வெறும் வாயை மென்று கொண்டிருக்க வேண்டியதுதான். இதை எழுதிக் கொண்டிருக்கும்போது புதிதாக ஒரு தகவல் கிடைத்தது. அதுதான் தேயிலை ஏற்றுமதியில் அதிர்ச்சி தரும் வீழ்ச்சி சம்பந்தமான செய்தி.

இலங்கைத் தேயிலையை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளில் உக்ரைன், ரஷ்யா, சீனா ஆகியன முன்னிலை வகிக்கின்றன. இந்நாடுகளிலிருந்து தேயிலைக்கான கேள்விகள் அதிகமாகவே கிடைத்திருக்கின்றன. ஆனால் ஏற்றுமதியில் தான் சரிவு. உக்ரைன் நாட்டுக்கான ஏற்றுமதியில் 19 வீதம் ரஷ்யா 55 சதவீத சரிவு, சீனா நாட்டுக்கான ஏற்றுமதியில் 24 சதவீதமென சரிவு ஏற்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் உள்நாட்டு தேயிலை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியே ஆகும். தற்பொழுது நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் தேயிலை உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டு வேறு. பறிக்கும் தேயிலையை ஒரு இடத்திலிருந்து பிறிதோர் இடத்துக்கு கொண்டு செல்வதில் எரிபொருள் தட்டுப்பாடு நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது. தொழிற்சாலைகள் கிரமமாக இயங்க போதிய மின்சாரம், எரிபொருள் அவசியமாகின்றது.

விறகைப் பயன்படுத்துவதிலும் சிக்கல் காணப்படுகின்றது. விறகுக்காக மரங்களை வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் வேலை செய்ய எரிபொருள் தேவை. எரிபொருள் விநியோகத்தில் தேயிலை தொழிற்சாலைகளுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டுமென ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்திருந்தும் அவ்வாறு இடம்பெறுவதாக இல்லை என்று தோட்ட நிர்வாகங்கள் கவலைத் தெரிவிக்கின்றன.

இவ்வாறான பின்புலத்திலேயே தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படும் நிலை தோன்றியுள்ளது. உற்பத்தி வீழ்ச்சி ஏற்றுமதியில் சரிவைச் சந்திக்க வைத்துள்ளது. இதனைத் தவிர்ப்பதற்கு தேவையான எரிபொருளை தோட்ட நிர்வாகங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியமாகின்றது.

தற்போது பெருந்தோட்ட மக்களுக்கான வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன. எரிபொருள் பற்றாக்குறையால் ஏனைய துறைகளைப் போலவே தேயிலைத்துறையும் பாதிக்கப்படவே செய்கின்றது. தோட்ட மக்களின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, பதுளை மாவட்டங்களில் வாழும் அநேகமான தோட்டக் குடும்பங்கள் மேலதிக வருமானத்துக்காக இருக்கும் சிறு இடங்களில் மரக்கறி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வருகின்றன. சில குடும்பங்களுக்கு இதுவே மூலாதார வருமானமாகவும் காணப்படுகின்றது. நிலவும் பசளைத் தட்டுப்பாடு இதனையும் கவ்வாத்து செய்துள்ளது.

ஆய்வுகளின்படி 40 சதவீதம் மரக்கறி பயிர்ச்செய்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தோட்ட மக்கள் விரக்தியடைந்துள்ளார்கள். பசளையும் இன்றி நீர்பாய்ச்சும் இயந்திரங்களுக்கு எரிபொருளும் இன்றி மரமேறி விழுந்தவனை மாடேறி மிதித்தக் கதையாகிப் போயுள்ளது.

உணவு பொருட்களின் விலையேற்றம் சமாளிக்க முடியாத அளவு உக்கிரமடைந்து வருகின்றது. அரசாங்கம் மற்றும் தமிழக அரசின் நிவாரண விநியோகங்களில் நிகழும் முறைபடுத்தப்படா நிலையில் ஏமாற்றங்களையே தருகின்றன. இதனைக் கருத்திற்கொண்டு தமிழ் முற்போக்குக் கூட்டணி அண்மையில் இந்திய உயர் ஸ்தானிகரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாக அதன் தலைவர்களில் ஒருவரான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதன்போது தோட்ட மக்களுக்கு பிரத்தியேக நிவாரணமாக குடும்பம் ஒன்றுக்கு மா 25 கிலோ, மரக்கறி பயிர்ச்செய்கைக்கான பசளை, பாடசாலை பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்களை தந்துதவ நடவடிக்கை எடுக்கும்படி கோரப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

1500 ரூபாவுக்கு விற்கப்பட்ட யூரியா உரம் தற்போது 40 ஆயிரம் ரூபாய். 1500 ரூபாவிற்கு விற்கப்பட்ட மரக்கறி உரம் 16 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மா ஒரு கிலோ 300 ரூபாய். பாடசாலை கொப்பி, பேனா, பென்சில், புத்தகப் பைகள், பிளாஸ் டிக் தண்ணீர் போத்தல்களின் விலைகள் பன்மடங்கு உயர்ந்துள்ளன. இச்சிக்கல்களிலிருந்து விடுபட இந்திய அரசு உதவுமாயின் இது ஓர் இடைக்கால நிவாரணமாக அமையும்.

இதற்கிடையே தோட்டங்களில் காடாக்கப்பட்டுக் கிடக்கும் 9 இலட்சம் ஹெக்டயர் தரிசு காணிகளை விவசாய நடவடிக்கைகளுக்காக பகிர்ந்தளிக்கும்படி ஜனாதிபதி அண்மையில் உத்தரவிட்டிருந்தார். இதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாகத் தெரியவருகின்றது. இதே வேளை இக்காணிகளைப் பகிர்ந்தளிக்கும்போது தமக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தோட்ட மக்கள் குறிப்பாக இளைஞர்கள் கோரி நிற்கின்றனர்.

இது சம்பந்தமாக தோட்ட நிர்வாகங்களோடு தொடர்பு கொண்டபோது அவர்கள் சொன்ன ஒரேபதில் தரிசு காணிகள் விநியோகம் சம்பந்தமான அரச வர்த்தமானி அறிவித்தல் இன்னும் வெளிவரவில்லை, முதலில் அது வரட்டும். அப்புறம் பேசலாம் என்பதேயாகுமென பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவிக்கின்றார்.

இதே வேளை தோட்ட நிர்வாகங்கள் சில அவசர அவசரமாக சில காணிகளை JCB இயந்திரங்கள் மூலம் துப்பரவு செய்துவருவதைக் காண முடிவதாகவும் வடிவேல் சுரேஷ் கூறியுள்ளார். சில தோட்டங்கள் ஏற்கனவே தோட்ட மக்கள் விவசாயம் செய்து கொண்டிருக்கும் தோட்டக் காணிகளை திருப்பித் தருமாறு கேட்டிருக்கும் தகவல்களும் வந்துள்ளன. சுமார் 25 வருடங்களுக்கு மேலாக விவசாயம் செய்து கொண்டிருக்கும் காணிகளைக்கூட இவ்வாறு கையளிக்க வற்புறுத்துவதாக பயனாளிகள் பதட்டமடைந்துள்ளார்கள்.

தரிசு காணிகளை விவசாய நடவடிக்கைகளுக்கு பகிர்ந்தளிக்கும் ஜனாதிபதியின் திட்டத்துக்கும் ஏலவே தோட்டக் காணிகளில் விவசாய முயற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் நிலங்களை திரும்பி ஒப்படைக்குமாறு நிர்வாகங்கள் விட்டிருக்கும் உத்தரவுக்கும் இடையில் என்னதான் சம்பந்தமோ! ஜனாதிபதியின் யோசனையைப் பயன்படுத்தி விவசாயம் செய்து கொண்டிருக்கும் தொழிலாளர்களை பழிவாங்க முனைகின்றதா இந்தத் தோட்ட நிர்வாகங்கள் எனும் ஐயம் மேலோங்கி நிற்கவே செய்கின்றது.

இதேநேரம் ஒரு தோட்ட நிா்வாகம் தம் வசம் இருக்கும் 350 ஏக்கர் தோட்டக் காணிகளைப் பகிர்ந்தளித்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. ஆக, பெருந்தோட்ட தரிசு காணிகளைப் பகிர்ந்தளிப்பதில் நியாயமான அணுகுமுறை அவசியமாகின்றது. இக் காணிகள் குறுகியகால ஒப்பந்த அடிப்படையிலேயே விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அவசியம் ஏற்படின் மீளப்பெறவும் நிர்வாகங்களுக்கு உரிமையுண்டு. தோட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் பட்சத்தில் வேண்டிய நேரத்தில் அதனைத் திரும்பவும் கையேற்பதில் பிரச்சினை எழப்போவதில்லை. ஆனால் இதனை வெளியாருக்கு வழங்கும்போது மீளப்பெறுவதில் சிக்கல்் ஏற்படவே செய்யும்.

எது எப்படியாயினும் தரிசு காணி விநியோகத்தில் தோட்ட மக்களுக்கு முன்னுரிமை வழங்குவது தார்மீக கடமை. இவ்விடயம் சம்பந்தமாக மலையகத் தலைமைகளின் அவதானமும் அழுத்தமும் போதுமானதாக இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ் முற்போக்கு முன்னணியும் இ.தொ.காவும் ஏகோபித்துக் குரல்கொடுக்க வேண்டிய தருணம் இது.

எழுத்து – பன். பாலா

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles