நாடாளுமன்றத்தை எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (11) நடைபெற்றது.
இதன்போது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைக்கு, அரசியலமைப்புக்குட்பட்ட வகையில் தீர்வு காண்பது குறித்தும்,, சர்வக்கட்சி இடைக்கால அரசு சம்பந்தமாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தனது பதவியை எதிர்வரும் 13 ஆம் திகதி துறப்பதாக அறிவித்துள்ளதால் – அவ்வாறு நடைபெறும் பட்சத்தில் நாடாளுமன்றத்தை 15 ஆம் திகதி கூட்டி, ஜனாதிபதி பதவியில் ஏற்பட்டுள்ள வெற்றிடம் குறித்து அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, வேட்புமனுக்களை கோருவதற்கும், 20 ஆம் திகதி புதன்கிழமை வாக்கெடுப்பை நடத்துவதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பதவிக்கு ஒருவர் மாத்திரம் வேட்பு மனுவை தாக்கல் செய்தால், வாக்கெடுப்பின்றி தேர்வு இடம்பெறும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால் வாக்கெடுப்புமூலம் தேர்வு இடம்பெறும்.
சஜித்தை களமிறக்க முடிவு
அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அக்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளின் எம்.பிக்களும் பங்கேற்றிருந்தனர்.
எதிர்வரும் 13 ஆம் திகதி வெற்றிடமாகும் ஜனாதிபதி பதவிக்கு சஜித் பிரேமதாசவை களமிறக்குவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாசவின் பெயரை, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார முன்மொழிந்தார். கட்சியின் தவிசாளர் சரத் பொன்சேகா அப்பெயரை வழிமொழிந்தார்.
ரணில் தலைமையில் முக்கிய கூட்டம்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று அமைச்சரவை மட்டத்திலான கூட்டமொன்று நடைபெற்றது. சர்வக்கட்சி அரசுக்கு ஆதரவளிப்பதற்கும், அமைச்சு பதவிகளை துறப்பதற்கும் அமைச்சர்கள் முடிவெடுத்துள்ளனர்.
எனினும், 13ஆம் திகதிக்கு முன்னர் பதவி விலகுவது குறித்து பிரதமர், இன்னமும் தெளிவானதொரு அறிவிப்பை விடுக்கவில்லை. சர்வக்கட்சி அரசு அமைந்தால், பதவி விலக தயார் என்றே அறிவிப்பு விடுத்துவருகின்றார்.
ஜனாதிபதி வெளிநாட்டில்?
கடந்த 9 ஆம் திகதி முதல் தலைமறைவு வாழ்வு வாழ்ந்துவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எங்கிருக்கின்றார் என உறுதியான தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் ஜனாதிபதி அருகில் உள்ள நாடொன்றில் இருக்கின்றார் என சபாநாயகர் பிபிசியிடம் தகவல் வெளியிட்டிருந்தார். தவறுதலாக இந்த கருத்தை வெளியிட்டுள்ளதாக தற்போது சபாநாயகர் அறிவித்துள்ளார்.
ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், சம்பிக்க ரணவக்க தலைமையிலான 43 ஆம் படையணி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று ஜே.வி.பி. தலைமையகத்தில் நடைபெற்றது. சமகால அரசியல் நிலைவரங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
சந்திப்பின் பின்னர் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும், அதுவரை அமையும் சர்வக்கட்சி அரசுக்கு ஆதரவு வழங்க தயார் எனவும் அநுர அறிவித்துள்ளார். அத்துடன், தம்மால் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் ஆட்சியை பொறுப்பேற்க தயார் எனவும் குறிப்பிட்டார்.










